Lok Sabha Election 2024: டிமிக்கி கொடுத்த நவீன் பட்நாயக்... எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவு...! தேசிய அரசியலில் ட்விஸ்ட்..!
பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 11 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் ஏற்கனவே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளுக்கு பின்னடைவு:
இதற்கிடையே, முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை அளித்துள்ளது. வரும் தேர்தலில் தன்னுடைய கட்சி தனித்து போட்டியிடும் என்றும் இதுவே தன்னுடைய திட்டம் என்றும் ஒடிசா முதலமைச்சரும் பிஜு ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மம்தாவை சமீபத்தில் சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து, நவீன் பட்நாயக்கை மம்தா சந்தித்தார். இப்படிப்பட்ட சூழலில், நவீன் பட்நாயக், முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளார்.
பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மம்தாவை சந்தித்த பிறகு காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதை மம்தா தவிர்த்து வந்த நிலையில், அதற்கு நேர்மாறான முடிவை அறிவித்துள்ளார் நவீன் பட்நாயக்.
டிமிக்கி கொடுத்த நவீன் பட்நாயக்:
நவீன் பட்நாயக் இன்று மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து செய்தியாளர்கள், அவரிடம் சில கேள்விகளை எழுப்பினர். தேர்தலில் தனித்து போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, "அதுதான் எப்போதுமே திட்டமாக இருந்துள்ளது. பூரி விமான நிலையத்தில் பிரதமரை சந்தித்தேன். அனைத்து வகையிலும் உதவுவதாக பிரதமர் கூறினார்" என பதில் அளித்துள்ளார்.
டெல்லிக்கு சென்றுள்ள நவீன் பட்நாயக், மற்ற அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதற்கு முன்பு, அவர் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
மக்களவைத் தேர்தல்:
மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில், ஆண்டின் தொடக்கத்தில், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. அல்லது பா.ஜ.க. அங்கும் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்தது.
இரண்டாவது கட்டமாக, கர்நாடகாவில் நேற்று சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள், வரும் 13ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து, இந்தாண்டின் இறுதியில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், பாரத் ராஷ்டிர சமிதி ஆளும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.