கொச்சி மருத்துவமனையில் தவறான தடுப்பூசி போட்டதால் குழந்தை பாதிப்பு?
கேரள மாநிலம் கொச்சி மருத்துவமனையில் 8 நாள் பச்சிளங்குழந்தைக்கு தவறான தடுப்பூசியை செலுத்தியதால் அக்குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி மருத்துவமனையில் 8 நாள் பச்சிளங்குழந்தைக்கு தவறான தடுப்பூசியை செலுத்தியதால் அக்குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரக் குழந்தைக்கு அளிக்க வேண்டிய தடுப்பூசிக்கு பதில் 6 வார குழந்தைக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் அக்குழந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து குழந்தையின் உறவினர் ராஜேஷ், என் மருமகள் பிறந்து 8 நாட்களே ஆகிறது. ஆனால் குழந்தைக்கு 6 வாரங்களில் வழங்கப்படும் தடுப்பூசியை மாற்றி வழங்கியுள்ளனர். இதனால் குழந்தை நோய்வாய்ப்பட்டது. இது ஒரு மோசமான அனுபவம் என்று கூறினார்.
இது குறித்து கொச்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கருத்து தெரிவிக்க மருத்துவிட்டனர். குழந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் எர்ணாகுளத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு உரிய காலத்தில் போடப்படும் தடுப்பூசி, பிற்காலத்தில் அந்தக் குழந்தையின் ஆரோக்கியத்தைக் காக்கும் அரணாக அமையும். பெரும் செலவையும் மன உளைச்சலையும் தவிர்க்கும். அதனால், தடுப்பூசி விஷயத்தில் அலட்சியம் கூடாது. செலவு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அரசாங்கமே, அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்களிலும் பெரும்பாலான ஊசிகளை இலவசமாகப் போடுகின்றது. பெற்றோராகிய நம்முடைய மிகப் பெரிய பொறுப்பு... உரிய காலத்தில் அவற்றை எல்லாம் குழந்தைகளுக்குப் போடுவது மட்டும்தான். தடுப்பூசிக்கான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவில் பின்பற்றப்படும் குழந்தைகளுக்கான தடுப்பூசு அட்டவணையாகும். முறையாக தடுப்பூசிகளை செலுத்தி எதிர்கால இந்தியாவின் நலனைப் பேணுவோம். சிலர் தடுப்பூசி செலுத்தாமல் குழந்தைகளை இயற்கை முறையில் வளர்க்கிறோம் என்றும் கூறி தடுப்பூசிகளை தவிர்த்து வருகின்றனர். இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. கொரோனா போன்ற கொடிய நோய்கள் உலகை அச்சுறுத்தும் சூழலில் தடுப்பூசி என்ன செய்யும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி அட்டவணை
பிசிஜி – பிறப்பின் போது
ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) – பிறப்பின்போது
ஹெபடைடிஸ் பி (2) – 4 வாரங்கள்
டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 8 வாரங்கள்
டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 12 – 20 வாரங்கள்
டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 18-20 வாரங்கள்
அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) – 8-9 மாதங்கள்
சின்னம்மை (விருப்பத்துடன்) – 12-18 மாதங்கள்
எம்எம்ஆர் – 15-18 மாதங்கள்
எச்ஐபி (பூஸ்டர்) – 15-18 மாதங்கள்
டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) – 18-24 மாதங்கள்
ஹெபடைடிஸ்-ஏமருந்து (விருப்பம்) – 2 ஆண்டுகள்
டைபாய்டு ஊசி – 3 ஆண்டுகள்
டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) – 5 ஆண்டுகள்
ஹெபடைடிஸ் – ஏ மருந்து (விருப்பம் – 5 ஆண்டுகள்
எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம் எம் ஆர் கொடுக்காவிட்டால்) – 5 ஆ ண்டுகள்
வாய்வழியாக டைபாய்டு – 8 ஆண்டுகள்
வாய்வழியாக டைபாய்டு – 9 ஆண்டுகள்
டெட்டானஸ் – 10 ஆண்டுகள்
சின்னம்மை தடுப்பூசி – 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)
டைபாய்டு வாய்வழியாக – 12 ஆண்டுகள்
டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) – 16 ஆண்டுகள்
மேற்காணும் தடுப்பூசிகள் அட்டவணை பகிர்ந்திருப்பது விழிப்புணர்வு ஏற்படுத்தவே, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுமுன் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட்டுவரவும்