(Source: ECI/ABP News/ABP Majha)
புத்தாண்டுக்கு ஃபேமிலி ட்ரிப் செல்ல 5 மிஸ் செய்யக்கூடாத இடங்கள்!
நீண்ட வார இறுதி நாட்களா? நம் நாட்டிலேயே சென்று பார்க்க மலை, நீர் சூழ்ந்த பகுதி எனப் பல இடங்கள் உள்ளன..
புத்தாண்டு நெருங்கி வருகிறது,வீட்டில் இருப்பவர்களுடன் சுற்றுலா ட்ரிப் ப்ளான் போடும் நேரம் இது. எல்லோரும் வெவ்வேறு நாடுகளில் புத்தாண்டைக் கொண்டாட தங்களது பாஸ்போர்ட்டை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தொலைதூர இடங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, நம் நாட்டின் அழகில் ஏன் திளைக்கக் கூடாது? நீண்ட வார இறுதி நாட்களா? நம் நாட்டிலேயே சென்று பார்க்க மலை, நீர் சூழ்ந்த பகுதி எனப் பல இடங்கள் உள்ளன.. இதோ 2023க்கான ட்ராவல் பக்கெட்டில் சேர்க்க வேண்டிய உங்களுக்கான பட்டியல்!
'பூமியின் சொர்க்கம்' என்று அழைக்கப்படும் - காஷ்மீர் பனி மூடிய மலைகள் நிறைந்த பகுதி. காஷ்மீர் அதன் சூப்பர் ருசியான உணவுக்காகவும் அறியப்படுகிறது.ரோகன் ஜோஷ் (கோழி மற்றும் ஆட்டிறைச்சியுடன் செய்யப்பட்டது) அதில் மிக முக்கியமானது. பனிச்சறுக்கு, குளிர்கால விளையாட்டு ஆகியவற்றுக்கு குல்மார்க், உறைந்த ஏரிகளின் அழகிய காட்சிகளுக்கு சோன்மார்க், புகழ்பெற்ற தால் ஏரி, படகுகள் மற்றும் மலர் தோட்டங்களுக்கு ஸ்ரீநகர், பைசரன் மலைகள், துலியன் ஏரி மற்றும் பஹல்காம் ஆகியவை காஷ்மீரில் பார்க்க சிறந்த இடங்கள்.
இந்த புத்தாண்டில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலையை அனுபவிக்க வேண்டுமா அல்லது மலையேற்றம் செய்ய வேண்டுமா? உங்கள் அடுத்த பயணத்தை ஹிமாச்சல பிரதேசத்திற்கு திட்டமிடுங்கள். கடுமையான பனிப்பொழிவுகள், குளிர்ச்சியான வானிலை, புனித யாத்திரைகள் மற்றும் ஆஃப்-ரோடு பைக் பயணங்களுக்கு பெயர் போன இடம் இது. மணாலி, சிம்லா, தர்மஷாலா, ரோஹ்தாங் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு போன்ற புகழ்பெற்ற இடங்களுக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இங்கு பயணிக்கலாம். இது மட்டுமின்றி, சாகச சவாரிகள், பாராகிளைடிங், பனிச்சறுக்கு ஆகியவற்றை வாழ்நாளில் ஒருமுறையேனும் செய்துபார்க்க வேண்டும் என விரும்புபவர் என்றால் உங்களுக்கான இடம் இதுவே...
உத்தராகண்ட், கடவுள்களின் தேசமான இது பல புனித யாத்திரை தலங்களையும் புனித நதிகளையும் கொண்டுள்ளது. ரிவர் ராஃப்டிங், பாறை ஏறுதல் மற்றும் பாறை தாண்டுதல் போன்றவற்றிற்காக இந்த மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷிற்கு வருகை தருபவர்கள் அதிகம். இந்த மாநிலம் அதன் புகழ்பெற்ற 'சார் தாம் யாத்ரா' (கேதார்நாத் பயணம், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய நான்கு இடங்களுக்குப் பயணம்) பெயர் போனது...
ராஜஸ்தான் நகரங்களுக்குச் செல்வதற்கு குளிர்காலமே சிறந்த சமயம், ஏனெனில் அந்த சமயம் மட்டுமே வானிலை இனிமையாக இருக்கும். நீங்கள் ஜெய்ப்பூருக்கான டூர் பேக்கேஜை எடுத்துக்கொண்டு ஹவா மஹால், ஜந்தர் மந்தர் மற்றும் ஆம்பர் கோட்டைக்கு செல்லலாம். உங்கள் வேலையிலிருந்து 3-5 நாட்கள் விடுமுறை எடுக்க முடிந்தால், பாலைவன சஃபாரிக்காக ஜோத்பூருக்குச் சென்று வரலாம். உதய்பூரின் லேக் சிட்டி பிச்சோலா ஏரி மற்றும் ஃபதே சாகர் ஏரிகளுக்கு பிரபலமானது. வழக்கமான ராஜஸ்தானி உணவு வகைகளான தால் பாத்தி சுர்மா, கட்டே கி சப்ஜி, பஜ்ரே கி ரொட்டி மற்றும் கேவர் போன்ற இனிப்பு வகைகளை ராஜஸ்தான் செல்பவர்கள் மிஸ் செய்யாமல் சுவைத்துப் பார்க்க வேண்டும்.
கேரளா அதன் பசுமையான இயற்கை அழகு, சுற்றுச்சூழல் சுற்றுலா, அற்புதமான கடற்கரைகள் மற்றும் சுவையூறச் செய்யும் உணவு வகைகளுக்கு நன்கு அறியப்பட்டதாகும். கொச்சி, மூணாறு, மராரி கடற்கரை, பத்மநாபசுவாமி கோயில் மற்றும் செம்பரா சிகரம் ஆகியவை நீங்கள் தவறாமல் சென்று பார்க்க வேண்டிய சில பிரபலமான இடங்களாகும்.