Kerala POCSO: ஆசிரியரை சீரழித்த மாணவி.. 7 ஆண்டுகளுக்குப்பின் வெளியான பின்னணி.. கேரளாவில் பரபரப்பு...
கேரளாவில், பாலியல் குற்றச்சாட்டால், ஒரு ஆசிரியரின் வாழ்க்கை சீரழிந்த நிலையில், 7 ஆண்டுகளுக்குப்பின் நடந்த அந்த சம்பவத்தால் அவரது வாழ்க்கையே மாறியிருக்கிறது. அந்த சுவாரஸ்ய நிகழ்வு என்ன தெரியுமா.?

தங்களுக்கு இருக்கும் சலுகைகளை தவறாக பயன்படுத்தினால், அது வேறு ஒருவரின் வாழ்க்கையை எப்படி சீரழிக்கும் என்பதற்கு உதாரணமாக கேரளாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டு ஒன்றில் கைதான ஒரு ஆசிரியரின் வாழ்க்கையே சூனியமாகியிருக்கிறது. ஆனால், 7 ஆண்டுகளுக்குப்பின் ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. அது என்ன என்று பார்க்கலாம்.
ஆசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவி
கேரளாவின் கோட்டயம் அருகே மதுரவேலி பகுதியைச் சேர்ந்தவர், 45 வயதான ஆசிரியர் ஜோமோன். இவர் குருபந்தரை என்ற பகுதியில் 2017-ம் ஆண்டு பாரா மெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திவந்துள்ளார். அங்கு கொச்சியைச் சேர்ந்த ஒரு மாணவி படித்துவந்துள்ளார். இந்நிலையில், திடீரென ஒருநாள், ஜோமோன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போலீசில் அந்த மாணவி புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து ஜோமோன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் வருமானத்தை இழந்த அவரது குடும்பம் ஏழ்மையில் வாடிய நிலையில், குடும்பத்தினர் வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர். இதனிடையே, ஜாமீனில் வெளியே வந்த ஜோமோன் கூறிய எதையும் அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. குடும்பத்தினர் நிராகரித்த நிலையில், ஏதோ ஒரு வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்திவந்துள்ளார் ஜோமோன்.
7 ஆண்டுகளுக்குப்பின் வந்த மாணவி செய்தது என்ன.?
இந்த சம்பவங்களுக்கு இடையே, ஆசிரியர் ஜோமோன் மீது புகார் அளித்த மாணவிக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், தன்னுடைய புகாரால் ஜோமோனின் வாழ்க்கை சீரழிந்தது குறித்து மாணவிக்கு தெரியவந்து, அவர் மிகவும் மன வேதனை அடைந்துள்ளார்.
இதையடுத்து, சமீபத்தில் ஜோமோனின் குடும்ப தேவாலயத்திற்கு தனது கணவருடன் சென்ற அந்த மாணவி, திருப்பலிக்கு இடையே, ஆசிரியர் ஜோமோன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதோடு, யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் தான் ஜோமோன் மீது பொய் புகார் அளித்ததாகவும், ஆசிரியர் நிரபராதி என்றும் கூறி கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆசிரியர் ஜோமோன்
மேலும், அதோடு நிற்காமல் நீதிமன்றம் வரை சென்று, நீதிபதி முன் ஆஜராகி, நடந்தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதுடன், தனது புகாரையும் வாபஸ் பெற்றுள்ளார் அந்த மாணவி. இதைத் தொடர்ந்து, ஜோமோனை வழக்கிலிருந்து விடுவித்தது நீதிமன்றம்.
இதைத் தொடர்ந்து, தான் நிரபராதி என விடுவிக்கப்பட்டதை அறிந்து குடும்பத்தினர் தன்னை மீண்டும் ஏற்றுக் கொண்டதாகவும், இதைவிட தனக்கு மகிழ்ச்சியான தருணம் வேறு இருக்க முடியாது என்றும் ஜோமோன் கூறியுள்ளார். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டது.
சில பெண்கள் இப்படி செய்வது சரியா.?
பாலியல் புகாரில் சிக்குபவரின் குடும்பம் எந்த அளவிற்கு சிரமங்களை எதிர்கொள்ளும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சாட்சியாக இருக்கிறது. பாலியல் புகார் அளிக்கப்பட்டவரை இந்த சமூகம் எப்படி பார்க்கும்.? அவரது குடும்பத்தினர் அவரை எப்படி நடத்துவார்கள்.? பாதிக்கப்பட்டவர் எப்படி ஒரு மன உளைச்சலுக்கு ஆளாவார் என்பதையெல்லாம் ஒரு பெண் யோசிக்க வேண்டும்.
புகார் உண்மையாக இருந்தால் அந்த சூழல் வேறு. ஆனால், ஜோமோன் போன்ற நிரபராதிகள் எத்தனை பேர் பொய் புகார்களால் பாதிக்கப்படுகின்றனர்.? பாலியல் புகார் அளித்தால், அந்த பெண்ணிற்கே சட்டமும், காவல்துறையும் சாதகமாக செயல்படும் என்ற எண்ணத்தில், சில பெண்கள் தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது இப்படி பொய் புகார் அளித்தால் அது நியாயமாக இருக்குமா.?
காவல்துறை இங்குதான் கவனமாக செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகின்றனர். பாலியல் புகார் அளிக்கப்பட்டால், அது பழிவாங்க வேண்டும் என்பதற்காக அளிக்கப்பட்டதா.? அல்லது அதில் உண்மை உள்ளதாக என்பதை, நன்கு விசாரித்து, அதன் பின்னரே வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஒரு பொய் பாலியல் புகாரால், எத்தனை அலைச்சல்கள், எவ்வளவு பண விரயம், எவ்வளவு நேரம் விரயம் என்பதையெல்லாம் யோசிக்க வேண்டும். அதோடு, இப்படியான பொய் புகார்களில் சிக்கி, எத்தனை கவுரவமான குடும்பங்கள் சீரழிகின்றன என்பதை, கேரளா சம்பவம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இனியாவது காவல்துறை கவனத்துடன் செயல்படுமா என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.



















