Kerala shawarma: ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது இந்த காரணத்தால்தான்! வெளியான பிரேதபரிசோதனை முடிவு!!
உயிரிழந்த சிறுமிக்கு பிரேத பரிசோதனையும் நடந்தது. இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
இரண்டு நாட்களாக சவர்மா உணவுதான் இந்தியா முழுவதும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. காரணம்,கேரளாவில் நடந்த ஒரு துயர சம்பவம்.கேரளாவில் காசர்கோடு அருகே 16 வயதுச் சிறுமி தேவநந்தா, சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். அந்தக் கடையில் சாப்பிட்ட 49 பேர், வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடை உரிய அனுமதி இன்றி இயங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்ததும் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடை மேலாளர், ஷவர்மாவைத் தயாரித்த இருவர் மற்றும் இணை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காரணம் என்ன?
இந்நிலையில் சவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்து உண்மைதான் என்றாலு உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை மருத்துவத்துறையினர் ஆய்வு செய்தனர். உயிரிழந்த சிறுமிக்கு பிரேத பரிசோதனையும் நடந்தது. இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி சிறுமியின் உயிரிழப்பிற்கு ஷிகெல்லா வகை பாக்டீரியாதான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசுத்தமான தண்ணீர் மற்றும் அசுத்தமான உணவில் இந்த பாக்டீரியா பரவும் என கூறப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா பரவியதால்தான் சிறுமி உயிரிழந்தார் என்றும், மேலும் 3 பேருக்கு இந்த பாக்டீரியா பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் சொல்வது என்ன?
ஷவர்மாவுக்கெனப் புதிய, ஃப்ரெஷ்ஷான இறைச்சியே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மீதமாகும் இறைச்சியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, அடுத்த நாளில் சில கடைக்காரர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் உணவு மெல்ல விஷமாக மாறுகிறது.
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணரும் குழந்தைகள் நல மருத்துவருமான குணசிங் ’ஏபிபி நாடு’விடம் கூறும்போது, ’’ஷவர்மா மாதிரியான துரித உணவுகளில் அதிக அளவில் உப்பு, கொழுப்பு, சர்க்கரை ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இவை அனைத்துமே உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை. அதேபோல நம்முடைய சுவை நரம்புகளைத் தூண்டி, இத்தகைய உணவுகளுக்கு அடிமையாக்கும். இவற்றால் உடல் எடை கூடும், பருமன் அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவை ஏற்படும். ரத்தத்தில் கொழுப்பு படியும். மூளையில் இருந்து கிட்னி வரை பாதிப்பு ஏற்படும் என்றார்
எப்படிக் கண்டுபிடிப்பது?
வாந்தி, பேதி ஆகியவற்றைப் பரிசோதனை (Bacteria Culture Test) செய்வதன் மூலம் உணவில் என்ன பிரச்சினை என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
முடிந்த அளவு வெளிப்புற உணவைத் தவிர்த்து, வீட்டு உணவை உட்கொள்வதே இத்தகைய சம்பவங்களைத் தடுக்கவும் உடல் நலனைக் காக்கவும் ஒரே வழி. அதேபோல உணவுத் தரக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள், அடிக்கடி உணவகங்களில் பரிசோதனை நடத்த வேண்டியது அவசியம்’’.
இவ்வாறு மருத்துவர் குணசிங் தெரிவித்தார்.