Cauvery Water: காவிரி பிரச்னை ..மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடும் கர்நாடகா
நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பரிசீலனை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு தொடர உள்ளது.
![Cauvery Water: காவிரி பிரச்னை ..மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடும் கர்நாடகா Karnataka to move Supreme court seeking direction to Cauvery water management authority Cauvery Water: காவிரி பிரச்னை ..மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடும் கர்நாடகா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/2dc4a99b070fa383c0cdfef99d7e171a1692507434600729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜூன் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 9ஆம் தேதி வரை, 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தந்திருக்க வேண்டும். ஆனால், பருவமழை தாமதம் காரணமாக 3 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கியுள்ளதாக தெரிகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு:
இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நிலுவையில் உள்ள 37.9 டிஎம்சி நீரை திறந்துவிடக் கோரிய தமிழ்நாட்டின் கோரிக்கையை கர்நாடகா ஏற்க மறுத்ததால் தமிழ்நாடு நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.
இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டார். ஆனால், கர்நாடகாவில் கடும் வறட்சியை சந்தித்து வருவதாகவும், தண்ணீர் திறப்பு குறித்து மத்திய அரசு அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்திருந்தார்.
உச்ச நீதிமன்றத்தை நாடும் கர்நாடக அரசு:
இந்த நிலையில், அடுத்த 15 நாள்களுக்கு நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பரிசீலனை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு தொடர உள்ளது.
இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு அம்மாநில அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் மற்றும் சட்டப்பேரவை விவகாரங்கள்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல், "அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள மாநில அரசின் தலைமை வழக்கறிஞருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும், இந்த விவகாரத்தை முன்கூட்டியே விசாரிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அவர் கேட்டு கொள்ளப்பட்டார். தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் திறந்து விடுவது குறித்த விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுப்பார்" என்றார்.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும் கர்நாடக அரசின் முடிவை எதிர்க்கட்சிகளான பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கடுமையாக சாடி வருகிறது. கர்நாடகமே வறட்சியில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவது கர்நாடக மாநிலத்தின் குடிநீர் விநியோகத்தை மேலும் மோசமாக்கும் என எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)