Dengue: அச்சுறுத்தும் டெங்கு! அலட்சியமா இருந்தா இனிமேல் அபராதம் மக்களே - எவ்வளவு?
டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் டெங்கு கொசு உற்பத்தியாகும் அளவிற்கு அலட்சியமாக செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பொதுவாக பருவ காலங்கள் மாறும்போது காய்ச்சல் உள்பட உடல்நலக்குறைவு மனிதர்களுக்கு ஏற்படுவது இயல்பாகும். அந்த வகையில், இந்தியாவில் பெரும் அச்சறுத்தலாக விளங்குவது டெங்கு காய்ச்சல் ஆகும். டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தடுப்பதற்காகவும், உயிரிழப்புகளைத் தடுப்பதற்காகவும் மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கர்நாடகாவை அச்சுறுத்தும் டெங்கு:
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலால் சுமார் 25 ஆயிரம் பேர் இந்தாண்டு பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது இந்தாண்டு 5 ஆயிரம் பேருக்கு பாதிப்பு அதிகம். இதையடுத்து, அந்த மாநில அரசு டெங்கு தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக எடுத்துள்ளது.
டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்துள்ள அந்த மாநில அரசு, டெங்குவை பரப்பும் விதமாக அலட்சியமாக நடந்து கொள்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
அபராதம்:
அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு நிலம், கட்டிடம், தண்ணீர் தொட்டிகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட எந்த இடத்திலும் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது ஒவ்வொரு கட்டிட, அந்த இடத்தின் உரிமையாளரின் கடமையாகும்.
வீடுகள் தோறும் சென்று ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அப்போது, ஏதேனும் கொசுக்கள் உற்பத்தியாகும் விதத்தில் அலட்சியமாக வீட்டு மற்றும் கட்டிட உரிமையாளர் செயல்பட்டு இருந்தால் 400 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
எவ்வளவு?
வீடுகளில் உள்ள பூந்தொட்டிகள், வாளிகள் அல்லது கட்டிடத்திற்குள் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு ஏதுவாக தண்ணீர் தேங்கியிருந்தால் நகர்ப்புறங்களில் ரூபாய் 400-ம், கிராமப்புறங்களில் ரூபாய் 200ம் அபராதம் விதிக்கப்படும்.
வணிக நிறுவனங்களுக்கு டெங்கு ஒழிப்பு விதிகளைப் பின்பற்றாவிட்டால் அபராதம் இரு மடங்கு விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், அலுவகலங்கள், கல்வி நிறுவனங்கள், உணவகங்கள், ஓய்வு விடுதிகள், கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பஞ்சர் பார்க்கும் கடைகள், தாவரங்கள் விற்பனை செய்யும் கடைகள் தண்ணீர் தேவையில்லாமல் தேங்கியிருந்தால் கிராமப்புறங்களில் ரூபாய் 500ம், நகர்ப்புறங்களில் ரூபாய் 1000ம் அபராதமாக விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
மாநில அரசு அபராதம் விதிக்கும் என்று எச்சரித்துள்ளதால் கர்நாடகத்தில் வீடு மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தேவையற்ற தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், அந்த மாநில சுகாதாரத்துறையும் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.