Karnataka CM: 20ஆம் தேதி பதவியேற்கும் சித்தராமையா.. துணை முதல்வராக சிவக்குமார்: கை மாறுகிறதா முக்கிய இலாக்காக்கள்!
நேற்று சித்தராமையா மற்றும் சிவக்குமார் தனித்தனியே அரை மணிநேர இடைவெளியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றபோதிலும் யார் முதலமைச்சர் என்று இன்று வரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவிக்கவில்லை. இந்த போட்டியில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கர்நாடகா தேர்தல்:
இந்தியளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா தேர்தல் கடந்த 10 ம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகளானது 13ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி 34 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட 5 நாட்கள் ஆனபோதும் யார் முதலமைச்சர் என்று தெரியவில்லை. இதையடுத்து, கர்நாடகாவின் முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு எடுக்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சித்தராமையாவுக்கு ஆதரவு..?
கடந்த 15ம் தேதி பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவிற்கு ஆதரவு தெரிவித்ததாகவும், இதன் காரணமாக காங்கிரஸுன் அழைப்பின் பேரில் சித்தராமையா டெல்லிக்கு சென்றதாகவும் தகவல் வெளியானது. உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கடந்த 16ம் தேதியே டெல்லி சென்றார்.
இருவரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, நேற்று சித்தராமையா மற்றும் சிவக்குமார் தனித்தனியே அரை மணிநேர இடைவெளியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தி டி.கே சிவக்குமாரிடம் வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு முதலமைச்சர் பதவி சித்தராமையாவுக்கு, தங்களுக்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்குவதாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் காலத்தில் தங்களுக்கு உரிய மேலிட பதவி வழங்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்ததாக தெரிகிறது.
முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த டி.கே.சிவக்குமார் தனக்கு முதலமைச்சர் பதவி கொடுக்காவிட்டால் சித்தராமையாவிற்கும் கொடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக மல்லிகார்ஜூன கார்கேவுக்கே அந்த பதவியை கொடுங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து ராகுல் காந்தி சிவக்குமாரை சம்மதிக்க வைத்து, அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதிருப்தியில் கார்கேவையும் சிவக்குமார் சந்தித்து பேசியபோதும், கார்கேவும் அவரிடம் இதையேதான் தெரிவித்துள்ளார். வேறு வழியின்றி சரி என்று ஏற்றுகொண்டு சிவக்குமாரும் கர்நாடகா திரும்பியுள்ளார்.
இதையடுத்து கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், வருகின்ற மே 20ம் தேதி இவர்கள் இருவருக்கும் பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெற இருப்பதாகவும் தெரிகிறது.