BS Yeddiyurappa Grand Daughter Suicide | கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூராப்பாவின் பேத்தி தற்கொலை
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் முக்கியமான பாஜக தலைவர்களில் ஒருவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இவருடைய மூத்த மகள் பத்மாவிற்கு சௌந்தர்யா(30 வயது) என்ற மகள் உள்ளார். இவர் கர்நாடகாவில் உள்ள எம்.எஸ்.ராமய்யா மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மருத்துவர் ஒருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு 6 மாத குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் இருவரும் மவுண்ட் கார்மல் கல்லூரி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை தன்னுடைய வீட்டில் சௌந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவருடைய உடல் பெங்களூருவிலுள்ள லெடி கர்சன் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சௌந்தர்யா வீட்டில் தற்கொலை தொடர்பான கடிதம் ஏதாவது இருக்கிறதா என்பதை தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை அவருடைய மரணத்திற்கு உரிய காரணம் எதுவும் தெரியவில்லை. தன்னுடைய பேத்தியின் திடீர் மரணத்தை தொடர்ந்து எடியூரப்பா குடும்பம் முழுவதும் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் உடற்கூறு ஆய்வு நடைபெறும் மருத்துவமனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு ஆறுதல் கூற கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்கள் மருத்துவமனை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தற்கொலைக்காக காரணம் என்னவென்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:ஆந்திராவில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; மன உளைச்சலில் தந்தை தற்கொலை முயற்சி!