Shibu Soren: மூன்று முறை முதலமைச்சராகி, 308 நாட்கள் பதவி வகித்த ஷிபு சோரன் காலமானார் - என்ன காரணம்?
Shibu Soren Passes Away: ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் உடல்நலக்குறைவால் காலமானார்.

Shibu Soren Passes Away: ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் காலமானதை அவரது மகன் ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஷிபு சோரன் காலமானார்:
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் தனது 81வது வயதில் காலமானார். இதனை அவரது மகனும், தற்போதைய ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில் மூத்த தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, "இன்று நான் பூஜ்ஜியமாகிவிட்டேன்" என்று வேதனை தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கும் மேலாக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், ஜூன் மாத கடைசி வாரத்தில் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, வென்டிலேட்டர் உதவியுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
3 முறை முதலமைச்சர் பதவி:
ஷிபு சோரன் கடந்த 38 ஆண்டுகளாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவராக இருந்து வருகிறார், மேலும் கட்சியின் நிறுவனரும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று முறை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியெற்றாலும், ஒரு முறை கூட ஆட்சி காலத்தை பூர்த்தி செய்யாமல் 308 நாட்கள் மட்டுமே அந்த பதவியில் நீடித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த வந்த நிலையில் தான் அவர் உயிரிழந்துள்ளார்.
- 2005ம் ஆண்டு முதல்முறையாக முதலமைச்சரானபோது வெறும் 10 நாட்களில் அவரது ஆட்சி கவிழ்ந்தது
- 2008ம் ஆண்டு முதலமைச்சரானபோது 145 நாட்களில் அவரது தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்தது
- தொடர்ந்து 2009ம் ஆண்டு மூன்றாவது முறையாக முதலமைச்சரான ஷிபு சோரனின் ஆட்சி 153 நாட்களில் கவிழ்ந்தது
மத்திய அரசிலும் பங்கு:
தனது ஆதரவாளர்களால் 'டிஷூம் குரு' (சிறந்த தலைவர்) என்று அழைக்கப்படும் ஷிபு சோரன், இந்திய அரசியலில் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார். உயர்ந்த பழங்குடித் தலைவரும், ஜே.எம்.எம்-ஐ நிறுவியவர்களில் ஒருவருமான ஷிபு சோரன், 1987ம் ஆண்டு தொடங்கி ஏப்ரல் 2025 வரை அதன் மறுக்க முடியாத தலைவராக இருந்தார். தனி ஜார்க்கண்ட் மாநிலத்திற்கான இயக்கத்தில் முன்னணியில் இருந்த அவர், தும்கா தொகுதியிலிருந்து நீண்ட காலம் மக்களவை உறுப்பினர் வகித்து வந்தார். மூன்று முறை மத்திய அமைச்சர் பதவியும் வகித்துள்ளார்.
யார் இந்த ஷிபு சோரன்?
சோரன் கடந்த 1944ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி, இன்றைய ஜார்க்கண்டில் உள்ள நெம்ரா கிராமத்தில் ஒரு சந்தால் பழங்குடி குடும்பத்தில் பிறந்தார். பள்ளி மாணவனாக இருந்தபோது, வட்டிக்காரர்களால் பணியமர்த்தப்பட்ட குண்டர்களால் அவரது தந்தை கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அவரது ஆரம்பகால அரசியல் செயல்பாட்டை உறுதிப்படுத்தியது. பழங்குடி உரிமைகளின் தீவிர ஆதரவாளராகவும், பழங்குடியினருக்கான நில உரிமைகளை ஆதரிப்பவராகவும், நில உரிமையாளர்களின் சுரண்டல் நடைமுறைகளை எதிர்ப்பவராகவும் முக்கியத்துவம் பெற்றார்.
18 வயதில், அவர் சந்தால் நவ்யுவக் சங்கத்தை நிறுவினார். 1972 ஆம் ஆண்டில், வங்காள மார்க்சிஸ்ட் தொழிற்சங்கவாதி ஏ.கே. ராய் மற்றும் குர்மி-மஹாடோ தலைவர் பினோத் பிஹாரி மஹாடோ ஆகியோருடன் இணைந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) என்ற அமைப்பை உருவாக்கினார். பழங்குடி மக்களுக்கான தனி மாநிலத்தைப் பெறுவதே கட்சியின் முதன்மை நோக்கமாக இருந்தது . இந்தக் கனவு இறுதியில் 2000 ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் உருவாக்கப்பட்டதன் மூலம் நிறைவேறியது.





















