J&K Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் கொடூரம் - தீவிரவாதிகள் தாக்குதல், பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
J&K Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
J&K Terrorist Attack: தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் தாக்குதல் - 7 பேர் உயிரிழப்பு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தில் ககாங்கிர் எனும் பகுதியில் ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் தளத்தில், தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு மருத்துவர் மற்றும் ஆறு தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கந்தர்பாலில் உள்ள குண்டில் சுரங்கப்பாதை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள், தாமதமாக தங்கள் முகாமுக்குத் திரும்பியபோது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் யார்?
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், குறைந்தது இருவர் என்று நம்பப்படுகிறது. அவர்கள் உள்ளூர் மற்றும் உள்ளூர் அல்லாதோர் என இரு தரப்பினரையும் உள்ளடக்கிய, தொழிலாளர்கள் குழு மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த மேலும் நான்கு பேர் மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்கள் மருத்துவர் ஷாநவாஸ், ஃபஹீம் நசீர், கலீம், முகமது ஹனிஃப், ஷஷி அப்ரோல், அனில் சுக்லா மற்றும் குர்மீத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படை வீரர்கள்:
பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து, தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜிபி), வி.கே.பிர்டி உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் நிலைமையை ஆராய சம்பவ இடத்திற்கு வந்தனர். தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை தப்ப விட மாட்டோம் என்றார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், "ஜம்மு&காஷ்மீரில் ககாங்கிரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தீவிரவாதத் தாக்குதல் ஒரு வெறுக்கத்தக்க கோழைத்தனமான செயலாகும். இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க முடியாது,.மேலும் நமது பாதுகாப்புப் படையினரின் கடுமையான பதிலை எதிர்கொள்வார்கள்" என்று அமித் ஷா பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் கண்டனம்:
இதற்கிடையில், இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும், “ககாங்கிர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இறுதியானது அல்ல. ஏனெனில் உள்ளூர் மற்றும் உள்ளூர் அல்லாத தொழிலாளர்கள் என பலர் உள்ளனர். காயமடைந்தவர்கள் முழுமையாக குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். மேலும் பலத்த காயம் அடைந்தவர்கள் ஸ்ரீநகரில் உள்ள SKIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்” என உமர் அப்துல்லா தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.