Watch Video | அடித்துச்செல்லும் வெள்ளமும்.. உயிரைப் பணயம் வைக்கும் ராணுவமும்.. உத்தராகண்ட்டை காக்கும் அன்பு
உத்தராகாண்ட் மாநிலத்தில் கடுமையான மழை பெய்து வருவதையடுத்து, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டுள்ளது. நைனிடாலில் ராணுவத்தினர் மக்களைக் காப்பாற்றியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தராகாண்ட் மாநிலத்தில் கடுமையான மழை பெய்து வருவதையடுத்து, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டு, அவற்றால் இதுவரை சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தராகாண்ட் மாநிலத்தின் நைனிடால் பகுதியில் ராணுவத்தினர் மக்களைக் காப்பாற்றியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தராகாண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தளமான நைனிடால் நகரத்திற்குச் செல்லும் மூன்று சாலைகளும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டது. நிலச்சரிவு காரணமாக வீடுகள் இடிந்ததால், அந்த இடிபாடுகளில் சிக்கி, பலரும் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
உத்தராகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மாநிலத் தலைநகர் டெஹ்ராடூனில் அளித்த பேட்டியில், நைனிடால் பகுதிக்கு மூன்று ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டு, மக்களின் மீட்புப் பணிகளுக்காகவும், நிவாரணப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். மூன்று ஹெலிகாப்டர்களுள் இரண்டு நைனிடால் நகரத்திற்கும். ஒன்று கர்வால் பகுதிக்கும் அனுப்பப்பட்டு, அப்பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கப் பயன்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் நைனிடால் நகரத்தில் வெள்ளம் சூழ்ந்த சாலை ஒன்றில் மக்களை மீட்கும் ராணுவத்தினர் மனிதச் சங்கிலி வடிவில் நின்று, ஒவ்வொருவராகத் தூக்கிச் செல்லும் வீடியோ ட்விட்டர் தளத்தில் வெளியாகி, பலராலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Amazingly brave soldiers at work saving people in #Nainital after torrential rains triggered floods and landslides pic.twitter.com/BE9BRHcnqq
— Shilpa (@shilpakannan) October 19, 2021
இந்நிலையில், உத்தராகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் எனவும், அனைவரையும் மீட்கும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். `சார்தம்’ என்றழைக்கப்படும் புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் வானிலையில் மாற்றம் ஏற்படும் வரை பயணங்களை ரத்து செய்து, தாங்கள் இருக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்கவும் கோரி அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கணக்கிட்டு வருவதாகவும், விவசாயிகள் மழைகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் பேசியதாகக் கூறியுள்ளார் முதல்வர் புஷ்கர் சிங் தாமி. நைனி குளம் நிரம்பியதையடுத்து, அதன் அருகில் உள்ள மால் ரோடு, நைனா தேவி கோயில் ஆகியன வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியிலுள்ள விடுதிக் கட்டிடம் ஒன்று நிலச்சரிவு காரணமாகக் கடுமையாக சேதமடைந்துள்ளது.
நைனிடால் மாவட்ட நிர்வாகம், மாநில அரசு, இந்திய ராணுவம் ஆகியவற்றுடன் இணைந்து சுற்றுலா பயணிகளைக் காப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், நகரத்திற்குள் மக்கள் நுழைவதையும், வெளியேறுவதையும் காவல்துறை கண்காணித்து மழை முடியும் வரை மக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.