Harish Salve Marriage: லண்டனில் நடந்த பார்ட்டி.. 3வது திருமணத்தால் சர்ச்சை..யார் இந்த ஹரிஷ் சால்வே..?
ஹரிஷ் சால்வே இந்திய நீதித்துறையில் முக்கியமான நபர். பிரபல அரசியல்வாதியும், பிசிசிஐ-ன் முன்னாள் தலைவருமான என்.கே.பி.சால்வேவின் மகன்தான் இந்த ஹரிஷ் சால்வே.
மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றிய ஹரிஷ் சால்வே இங்கிலாந்தில் மூன்றாவது திருமணம் செய்துகொண்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.
68 வயதான நபர் 3வது திருமணம் செய்துகொண்டது அவரது தனிப்பட்ட விருப்பம்தான். ஆனால், அவரது திருமண நிகழ்ச்சியில், இந்தியாவில் பண மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற லலித் மோடி மற்றும் பணமோசடி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்றுவரும் மொயின் குரேஷி ஆகியோர் கலந்துகொண்டிருப்பதுதான் பேசுபொருளாகியிருக்கிறது.
ஹரிஷ் சால்வே இந்திய நீதித்துறையில் முக்கியமான நபர். பிரபல அரசியல்வாதியும், பிசிசிஐ-ன் முன்னாள் தலைவருமான என்.கே.பி.சால்வேவின் மகன்தான் இந்த ஹரிஷ் சால்வே. நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த என்.கே.பி.சால்வே மற்றும் அம்ப்ரிதி சால்வே தம்பதிக்கு ஹரிஷ் சால்வே மற்றும் அருந்ததி உபாத்யயா என்ற இரண்டு பிள்ளைகள்.
என்.கே.பி.சால்வே பிரபல பட்டய கணக்காளர். ஹரிஷ் சால்வே மஹாராஸ்டிராவின் செயிண்ட் ஃப்ரான்ஸிஸ் டிசேல்ஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவின் க்ளாஸ்மேட் இவர். ஹரிஷ் சால்வேவும் அப்பாவைப் போல வருமானவர் பிரிவில் பட்டயகணக்காளர் தான். ஆனால், ஹரிஷ் சால்வேவுக்கு தன் தாத்தா கிரிமினல் வழக்கறிஞர் பி.கே.சால்வேவைப் போல, கொள்ளுத்தாத்தா முன்சிஃப்-ஐப் போல பிரபல வழக்கறிஞர்களாக ஆகவேண்டும் என்று ஆசை. நாக்பூர் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி படித்த அவர் 1980களில் சட்டத்தில் பயிற்சி செய்யத்தொடங்கினார். இவர் இண்டர்ன்ஷிப் செய்ததே இந்தியாவில் பிரபல சட்டகுழுமமான ஜே.பி.தாதாசந்த்ஜி அண்ட் கோ-வில்தான். பயிற்சி காலம் முடிந்ததும் முழு நேர வழக்கறிஞராக பணியாற்றினார். அதன் பின்னர் டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக சால்வே நியமனம் செய்யப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக செயல்பட்டார். அதன்பின்னர் 1999ல் நடைபெற்ற வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக 2002 வரை செயல்பட்டார்.
Former Solicitor general of India, #HarishSalve got married for the 3rd time. Nita Ambani, Lalit Modi amongst others attended the ceremony.
— Kumar Mihir Mishra (@Mihirlawyer) September 4, 2023
Hopefully he is lucky the third time. pic.twitter.com/RVSPXyTujC
ஹரிஷ் சால்வேவின் க்ளையண்ட்டுகள் எல்லாம் பெரிய வஸ்தாதுகள். ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஸ் அம்பானியின் ஆஸ்தான வழக்கறிஞர் இவர். அனில் அம்பானிக்கு எதிரான கிருஷ்ணா கோதாவரி எரிவாயு வழக்கில் முகேஷ் அம்பானிக்கு ஆதரவாக வாதாடினார். முகேஷ் அம்பானி மட்டுமல்லாமல் டாடா குழுமம், ஐடிசி லிமிட்டெட் போன்ற நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் ரத்தன் டாடாவுக்காக தனிப்பட்ட முறையிலும் பல்வேறு வழக்குகளில் ஆஜராகியிருக்கிறார். 2.5 பில்ல்லியன் டாலர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வோடஃபோன் நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில் ஓடஃபோனுக்காக ஆஜரானார். பாம்பே உயர்நீதிமன்றத்தில் தோற்றாலும் உச்சநீதிமன்றத்தில் வெற்றிபெற்று கொடுத்தார்.
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ஆதரவாக வாதாடியவர் இவர்தான். அதேபோல ஆருஷி - ஹேம்ராஜ் இரட்டை கொலை வழக்கு, ஹிட் அண்ட் ரன் வழக்கில் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தண்டனைக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளில் ஆஜராகியிருக்கிறார். இந்தியா முழுமைக்கும் உற்றுநோக்கப்பட்ட குல்புஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் அவருக்கு ஆதரவாக வாதாடியது ஹரிஷ் சால்வே தான். இந்த வழக்கிற்கான கட்டணமாக அவர் பெற்றுக்கொண்டது ஒரு ரூபாய் தான் என்ற தகவல் பரவி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.
இதற்கிடையில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞராகவும் தன்னை உயர்த்திக்கொண்டார். 2013ல் இங்கிலாந்தில் பதிவு செய்துகொண்ட அவர், ப்ளாக்ஸ்டோன் சேம்பரிலும் இணைந்துகொண்டார். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதையும் 2015ல் ஹரிஷ் சால்வேவுக்கு வழங்கியது மத்திய அரசு.
Many congratulations to former SG Harish Salve on your third marriage at the age of 68 years.
— Narendra Modi🇮🇳🇷🇺🇺🇲 (@modiforindia007) September 5, 2023
Intimate wedding having limited edition of guest list includes Ms. Nita Ambani.@LalitKModi @ArcelorMittal #LNMittal
#HarishSalveMarriage #HarishSalve pic.twitter.com/Hbsyb8tBVv
ஹரிஷ் சால்வே மீனாட்சி சால்வே என்பவரை தான் முதலில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாக்ஷி மற்றும் சானியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 38 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நடந்த நிலையில் கடந்த ஜூன் 2020ல் மீனாட்சியை விவாகரத்து செய்துவிட்டு, அதே ஆண்டு அக்டோபரில் கரோலின் ப்ரோஸ்ஸர்ட் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவரை திருமணம் செய்து 3 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், அவரையும் விவாகரத்து செய்துவிட்டு ட்ரினா என்ற பெண்ணை தன் 68வது வயதில் கரம் பிடித்திருக்கிறார் ஹரிஷ் சால்வே. தற்போது வடக்கு லண்டனில் வசித்து வரும் இவர், திருமணத்தை முன்னிட்டு பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். லண்டனில் நடைபெற்ற இந்த பார்ட்டியில் முகேஷ் அம்பானி, நிதா அம்பானி, லலித் மோடி, மொயின் குரேஷி, உஜ்வாலா ராவத், சுனில் மிட்டல், எல்.என்.மிட்டல், கோபி ஹிந்துஜா உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த பார்ட்டியில் கலந்துகொண்ட லலித் மோடி நிதி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பியவர். அவரை இந்தியா கொண்டு வரவேண்டும் என்று வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தியாவை விட்டு ஓடிப்போன மோடிகள் என்று பேசி ராகுல் காந்திக்கு எம்பி பதவி பறிபோக காரணமாக இருந்தவர்களில் லலித் மோடியும் ஒருவர். அதேபோல, மொயின் குரேஷியும் பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் சிபிஐ விசாரணையில் இருப்பவர். இவர்கள் அனைவரும் ஹரிஷ் சால்வேவின் திருமணத்தில் கலந்துகொண்டது சர்ச்சையாகியிருக்கிறது.
சர்ச்சைக்கு இது மட்டும் காரணம் அல்ல. இந்தியாவில் தற்போது பல்வேறு தரப்பின் எதிர்ப்புகளுக்கு காரணமாகியிருக்கும் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் முயற்சிக்கு அமைக்கப்பட்டுள்ள ராம் நாத் கோவிந்த் தலைமையிலான கமிட்டியில் ஹரிஷ் சால்வேவும் ஒருவர் என்பதால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.