US Tariff: பணிந்தாரா மோடி? கம்மி விலையானாலும் வேண்டாம், ரஷ்யாவிற்கு இந்தியா கும்புடு? ட்ரம்ப் வரவேற்பு
US Tariff: ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்துவதாக வெளியாகியுள்ள தகவல், வரவேற்கத்தக்கது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

US Tariff: ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக, இந்தியாவிற்கு வரியுடன் அபராதமும் விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முடிவு? ட்ரம்ப் வரவேற்பு
அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் சரிநிகர் வரிவிதித்து வருகிறார். இதுதொடர்பான இந்தியாவிற்கான அறிவிப்பில், “அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களை வாங்குவதால், 25 சதவிகித வரியுடன் கூடுதலாக அபராதமும் இந்தியாவிற்கு விதிக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய வர்த்தக் கூட்டளியான அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை உள்நாட்டு ஏற்றுமதியாளர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான், ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்துவதாக வெளியாகியுள்ள தகவல், வரவேற்கத்தக்கது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் அது ஒரு நல்ல முன்னெடுப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் சொன்னது என்ன?
இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “ரஷ்யாவிடமிருந்து இனி இந்தியா எரிபொருள் வாங்கபோவதில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதை தான் நான் கேள்விபட்டேன். அது சரியா? தவறா? என்பது எனக்கு தெரியாது. அது ஒரு நல்ல முயற்சி. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என பதிலளித்தார். இதனால், சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் காரணமாக, மலிவு விலையில் கிடைக்கும் ரஷ்யாவின் எரிபொருளை வாங்குவதை, அமெரிக்காவின் அழுத்தத்தால் இந்தியா நிறுத்திவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
#WATCH | "I understand that India is no longer going to be buying oil from Russia. That's what I heard, I don't know if that's right or not. That is a good step. We will see what happens..." says, US President Donald Trump on a question by ANI, if he had a number in mind for the… pic.twitter.com/qAbGUkpE12
— ANI (@ANI) August 1, 2025
வெளியுறவு அமைச்சகம் சொன்னது என்ன?
முன்னதாக நேற்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில், “இந்தியாவின் எரிசக்தி கொள்முதல் சந்தை சூழல் மற்றும் தேசிய நலன்களை அடிப்படையாக கொண்டது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்ய இறக்குமதியை நிறுத்துவது தொடர்பான எந்தவொரு குறிப்பிட்ட முன்னேற்றங்கள் குறித்தும் அரசுக்கு தெரியாது” என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தள்ளுபடிகள் குறைந்ததாலும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா எச்சரித்ததாலும், இந்திய அரசு சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடந்த வாரத்தில் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதாக வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த விளக்கம் வெளியாகியுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, கடல்வழி ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகமாக வாங்கும் நாடாகும்.
”ரஷ்யாவிடம் கொள்முதல் நிறுத்தம்”
ராய்ட்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டின் அரசு சுத்திகரிப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப், பாரத் பெட்ரோலியம் கார்ப் மற்றும் மங்களூர் சுத்திகரிப்பு பெட்ரோகெமிக்கல் லிமிடெட் ஆகியவை கடந்த ஒரு வாரமாக ரஷ்ய கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யவில்லை. ஆனால், இதுதொடர்பாக அரசு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வெளியாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணிந்துவிட்டதாகவே எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.





















