Indo-Pak conflict: வங்கிச் சேவையில் எந்த பாதிப்பும் வரக்கூடாது.. பதற்றமான சூழலில் நிர்மலா சீதாராமன் உத்தரவு
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் வங்கிச்சேவைகள் ஏதும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.

பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது. இதன்பின்னர், இந்தியாவின் உள்ளே ஊடுருவ முயற்சித்த பாகிஸ்தான் ஜெட் விமானங்களை தாக்கி அழித்த இந்தியா பாகிஸ்தான் மீது சரமாரி தாக்குதலை நடத்தியது.
வங்கிகளுக்கு உத்தரவு:
இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒட்டுமொத்த நாடும் பதற்றத்திலும், பரபரப்பிலும் உள்ளது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்பட இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.
போர் பதற்றம் எந்த சூழலுக்கு சென்றாலும் அது நாட்டு மக்களின் பொருளாதாரத்தையும் அவர்களது வர்த்தகத்தையும் பாதிக்காத வகையில் சில நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாட்டில் உள்ள வங்கிகள் அனைத்தும் மக்களுக்கான வங்கிச் சேவைகள் தடையில்லாமல் நடக்க ஏதுவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.
வங்கிச்சேவைகள் பாதிக்கப்படக் கூடாது:
போர் பதற்றம் இருப்பதால் பாகிஸ்தான் இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் இன்று வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் வங்கிகளின் பங்களிப்பு குறித்து நிர்மலா சீதாராமன் இன்று கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் விளக்கமாக கூறினார்.
குறிப்பாக, இணையவழி மற்றும் அலுவல் வழி பணிகளில் இடையூறுகள் மற்றும் எந்த குறைபாடுகளும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்றும், அவசரகால நெறிமுறைகள் புதுப்பிக்கப்பட்டு செயலாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவத்தினர் ட்ரோன்கள் மூலமாக பலத்த தாக்குதல் நடத்தினர். முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் மோதலை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.





















