PM Modi: "2047க்குள் வளர்ந்த நாடு! வெற்று முழக்கம் அல்ல, 140 கோடி பேரின் கனவு" சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி சூளுரை
2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 11வது முறையாக இன்று தேசிய கொடியை ஏற்றினார். தேசிய கொடியை ஏற்றிய பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
துணை நிற்போம்:
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றியுள்ள சுதந்திர தின உரையில் பேசியதாவது, “ சுதந்திர திர போராட்டத்தில் இன்னுயிர் தந்தவர்களை போற்றுகிறோம். கடந்த சில ஆண்டுகளாக பேரிடர்களை எதிர்கொண்டாலும் நாம் அதில் இருந்து மீண்டு வருகிறோம். வயநாடு உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகள் வேதனை அளிக்கிறது. நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம்.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணைநிற்போம். நாட்டை பாதுகாக்க, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு பலர் உழைத்து வருகின்றனர். விவசாயிகள், ராணுவ வீரர்கள் நாட்டுக்காக கடுமையாக உழைக்கின்றனர். பேரிடர் காலங்களில் உறவுகளை இழந்தவர்களுக்கு இந்த தேசம் துணை நிற்கிறது.
2047க்குள் வளர்ந்த நாடு:
2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம். அப்போது பிரிட்டிஷ் அரசை எதிர்த்து 40 கோடி மக்கள்தான் போராடினார்கள். தற்போது 140 கோடி மக்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டு மக்கள் இந்த பாரதத்திற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
தேசத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் நாள். 20247ல் வளர்ச்சியடைந்த இந்தியாவில் நமது ஊடகத்துறை, உலகளாவிய ஊடகத்துறையாக மாற்றம் பெறும். உலக அளவில் 3வது பெரிய பொருளாதாரத்தை இந்தியா வெகு விரைவில் அடையும்.
வெற்று முழக்கம் அல்ல:
40 கோடி இந்தியர்களால் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. 140 கோடி பேர் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம். 2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவோம். ஜல்ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பயன் அடைந்துள்ளனர்.
உலகின் மிகப்பெரும் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். 2047ல் வளர்ந்த இந்தியா என்பது வெற்று முழக்கம் அல்ல. அது 140 கோடி இந்தியர்களின் கனவு. இந்தியாவில் நீதித்துறையில் மாற்றம் தேவை. மாற்றங்களை கொண்டு வருவோம்.”
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் மோடி 11வது முறையாக தொடர்ந்து தேசிய கொடியை செங்கோட்டையில் ஏற்றியுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 10 முறை தேசிய கொடியை செங்கோட்டையில் ஏற்றிய பிரதமர் மன்மோகன்சிங்கின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். சுதந்திர தின உரை முடிந்த பிறகு முப்படைகளின் அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்க உள்ளார்.