Top 10 News : முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட ஒப்பந்தம், கென்யாவில் அதானிக்கு எதிர்ப்பு - டாப் 10 செய்திகளின் ரவுண்ட்-அப்
தமிழ்நாடு உள்பட காலை முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.
கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் ₹500 கோடி முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். அமெரிக்காவின் சிகாகோ நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் கேட்டர்பில்லர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அதன் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்த உள்ளது
மதுரையில் விடுதி உரிமையாளர் கைது
மதுரையில் விசாகா என்ற பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விடுதியை நடத்தி வந்த இன்பா என்ற பெண் அதிரடியாக கைது. இந்த தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். விடுதியை காலி செய்யக் கோரி கடந்த ஆண்டே மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
"Bun-க்கு GST இல்ல.. அதுக்குள்ள வைக்குற Cream-க்கு 18% GST.. கடை நடத்த முடியல மேடம்"
கோவையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் புலம்பிய ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன். இதுதொர்பான வீடியோ இணையத்தில் வைரலாக் வருகிறது.
மெட்ராஸ் ஐஐடி நிர்வாகத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை அனுப்ப வரும் பெற்றோர்களுக்கு |விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து வேளச்சேரி நுழைவு வாயில் முன் பெற்றோர்கள் போராட்டம். 6ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி வளாகத்துக்குள் Pickup Dropக்கு அனுமதி மறுப்பு, 20கிமீ வேகத்தில் சென்றால் ₹10,000 அபராதம் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
70 வயதை கடந்தவர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இனி, 70 வயதை கடந்தவர்களும் சிகிச்சை பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 6 கோடி பேர் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை மருத்துவ காப்பீட்டு பலனை பெறலாம்.
குஜராத்தில் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி: ரத்த மாதிரிகள் சோதனை
கனமழையை தொடர்ந்து கட்ச் லக்பத் மற்றும் அப்தாசா தாலுகாவில் உள்ள 7 கிராமங்களில் கடந்த 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மொத்தம் 15 பேர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதில் 7 பேர் குழந்தைகளாவர். இதையடுத்து கூடுதல் தகவல்களுக்காக உயிரிழந்தோரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
உக்ரைனுக்கு மேலும் 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் அமெரிக்கா
மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் மின்சாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
கென்யாவில் அதானிக்கு எதிர்ப்பு:
கென்யாவின் ஜோமோ கென்யட்டா சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகள் பராமரிக்கும் ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றுள்ளது. இதனால் தங்களது வேலைவாய்ப்பு பறிபோகும் என, கென்யா விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை அந்நாட்டு உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
தெற்காசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை சாதனை
சென்னையில் நடைபெற்று வரும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 11.77 நொடிகளில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளார் தமிழ்நாடு வீராங்கனை அபிநயா. இந்த தொடரில் இதற்கு முன்பாக 2018ம் ஆண்டு இலங்கை வீராங்கனை அமஷா சில்வா 11.92 நொடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது.
ஒரே ஓவரில் 30 ரன்கள் விளாசிய டிராவிஸ் ஹெட்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. அதில், சாம் கரன் வீசிய ஒரு ஓவரில் 4,4,6,6,6,4 விளாசி 30 ரன்களை சேர்த்தார் டிராவிஸ் ஹெட். இதன் மூலம் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் என்ற, டேன் கிறிஸ்டியன் மற்றும் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை டிராவிஸ் ஹெட் சமன் செய்தார்.