Ilayaraja: இசைஞானி இளையராஜா இனி எம்.பியும் கூட.. பண்ணைபுரம் முதல் நாடாளுமன்றம் வரை..
Ilayaraja Rajyasabha MP: மாநிலங்களவை நியமன எம்.பியாக இசைஞானி இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
![Ilayaraja: இசைஞானி இளையராஜா இனி எம்.பியும் கூட.. பண்ணைபுரம் முதல் நாடாளுமன்றம் வரை.. Ilayaraja Compared PM Narendra Modi With Ambedkar Gangai Amaran Comment Full Recap Ilayaraja Rajya Sabha MP Ilayaraja: இசைஞானி இளையராஜா இனி எம்.பியும் கூட.. பண்ணைபுரம் முதல் நாடாளுமன்றம் வரை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/06/eab2ae41032d30ce940bfe321b81f5e31657120910_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாநிலங்களவை நியமன எம்.பியாக இசைஞானி இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தினம் தினம் இசைக்காக இளையராஜா சோஷியல் மீடியாவில் முணுமுணுக்கப்பட்டாலும் மூன்று மாதத்துக்கு முன்னர் இளையராஜா சோஷியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டார். அதுவும் இசையல்லாத ஒரு காரணத்துக்காக. ஒரு முன்னுரை எழுதி சர்ச்சைக்குள் சிக்கினார் ராஜா.
முன்னுரை..
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டது. அந்த புத்தகத்தின் முன்னுரையை இசைஞானி இளையராஜா எழுதினார். அதில், இளையராஜா, ”அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தையும், சிந்தனைகளையும் செயல்படுத்துபவர்களையும் நாம் நிச்சயம் ஊக்கப்படுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சி, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவைகளை மோடி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அம்பேத்கரின் கருத்தும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயற்சிக்கிறது.
பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அனைத்து துறைகளிலும் முன்னேறி கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அதில், பிரதமர் மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்து, சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்கு சட்டரீதியிலான பாதுகாப்பை அவர் உறுதி செய்துள்ளார். வீடுகள், கழிப்பிடங்களை ஏழை மக்களுக்காக மோடியின் ஆட்சியில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைந்துள்ளது.முத்தலாக் தடை சட்டத்தால் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை கண்டு அம்பேத்கரே மோடியை நினைத்து பெருமைகொள்வார். அம்பேத்கரும், மோடியும் இந்தியா பற்றி பெரிதாக கனவு கண்டவர்கள், செயலில் நம்பிக்கை கொண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இளையராஜாவின் இந்த முன்னுரைக்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது. அம்பேத்கருடன் மோடியை ஒப்பிடுவதா என பலரும் கேள்வி எழுப்பினர். ஏதேனும் பதவியை மனதில் வைத்து இளையராஜா இப்படி புகழ்ந்துவிட்டதாக சிலர் பதிவிட்டனர். அதேவேளையில் இளையராஜாவுக்கு ஆதரவு குரல்களும் எழுந்தன. ராஜாவுக்கு இல்லாத பேரா, புகழா, அவருக்கு பதவிக்கான தேவை என்ன இருக்கிறது? எனவும் ஆதரவாக பதிவிட்டனர். நேரடியாக இந்த விவகாரம் குறித்து பதிலேதும் இளையராஜா தெரிவிக்காத நிலையில் தன்னிடம் ராஜா இப்படித்தான் சொன்னார் என அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கங்கை அமரன் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என இளையராஜா கூறினார். தனக்கு எதிரான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாகவும் என்னிடம் இளையராஜா கூறினார். மற்றவர்கள் எப்படி கருத்து கூறுகிறார்களோ அதேபோல்தான் கருத்தைக் கூறினேன் என்றார். தான் பதவி வாங்குவதற்காக மோடியை புகழவில்லை. தான் கட்சிக்காரர் இல்லை என்றும் கூறினார். அம்பேத்கரையும் பிடிக்கும், மோடியையும் பிடிக்கும். அதனால் ஒப்பிட்டு பேசினேன் என்று இளையராஜா கூறினார்” என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)