Rajasthan Minister : ஓட்டுக்கு 25 கோடி ரூபாய் பேரம் பேசினாங்க : ராஜஸ்தான் அமைச்சர் ‘பகீர்’ குற்றச்சாட்டு..
Rajasthan Minister : ஓட்டுக்கு 25 கோடி ரூபாய் பேரம் பேசினாங்க : ராஜஸ்தான் அமைச்சர் ‘பகீர்’ குற்றச்சாட்டு..
சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களித்தால், தனக்கு 25 கோடி ரூபாய் வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாக, ராஜஸ்தானின் ராணுவ வீரர்கள் நலத்துறை இணை அமைச்சர் ராஜேந்திர குடா குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு மாறிய எம்.எல்.ஏ. குடா, 2020ல் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிரான கிளர்ச்சியின்போது இதேபோல் தனக்கு 60 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகக் கூறினார். இரண்டு சலுகைகளையும் தான் நிராகரித்ததாகவும், குற்றச்சாட்டை முன்வைக்கும் போது எந்த தலைவரையோ அல்லது கட்சியையோ குறிப்பிடவில்லை என்றும் குடா கூறினார்.
மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரான அவர் கடந்த திங்கள் அன்று ஜுன்ஜுனுவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த நிகழ்வில் உரையாற்றுகையில் இவ்வாறு பேசியுள்ளதாகத் தெரிகிறது.
அதற்கு மறுநாள் வெளிவந்த ஒரு வீடியோவில், மாணவர் ஒருவரின் கேள்விக்கு அவர் பதிலளித்ததாகப் பதிவாகியுள்ளது. அதில் தனது வாக்கை ஒருவருக்கு வழங்க 25 கோடி ரூபாய் தருவதாக தன்னிடம் கூறப்பட்டது என்றும் அதற்கு என்ன செய்ய என மனைவியிடம் கேட்டதாகவும் அவர்கள் நல்லெண்ணத்துடன் தருவதாகச் சொல்லியிருப்பார்கள் என்று சொன்னதாகவும் நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளார். கெலாட் அரசுக்கு எதிராக அப்போதைய துணை முதல்வர் சச்சின் பைலட் நடத்திய கிளர்ச்சியையும் அவர் குறிப்பிட்டார்.
"அரசியல் நெருக்கடியின் போது, எனக்கு 60 கோடி ரூபாய் தருகிறேன் என பேரம் பேசினார்கள். என் குடும்பத்தாரிடம் பேசினேன். எனது மனைவி, மகன் மற்றும் மகள் எனது நல்லெண்ணத்தைதான் விரும்புவதாகவும் பணம் அல்ல என்று பதிலளித்தனர்," என்று அவர் கூறினார்.
"உங்களுடன் இருப்பவர்கள் அப்படி நினைக்கும் போது எல்லாம் சரியாகிவிடும்" என்று பள்ளி மாணவரிடம் அவர் பேசியுள்ளார்.
2018 சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களாக வெற்றிபெற்று 2019ல் காங்கிரஸில் சேர்ந்த ஆறு எம்எல்ஏக்களில் குடாவும் ஒருவர். ஜூலை 2020ல் சச்சின் பைலட்டும் மற்ற 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கெலாட்டின் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்தபோது குடா உள்ளிட்டோர் கெலாட்டின் முகாமில் இருந்தனர். 2021 நவம்பரில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, முன்னாள் ராணுவ வீரர்களின் நலனுக்கான துறையை கையாண்ட குடா மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வழங்குவதன் மூலம் பாஜக தனது அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக கெலாட் பலமுறை குற்றம் சாட்டியுள்ளார். ஜூன் மாதம் நான்கு இடங்களுக்கு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில், சுயேட்சை வேட்பாளரும், ஊடக அதிபருமான சுபாஷ் சந்திராவை பாஜக ஆதரித்தது.
ஆனால் சுபாஷ் சந்திரா தோல்வியடைந்தார். மாநிலத்தில் இருந்து ஆளும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மூவரும், பாஜக வேட்பாள் ஒருவரும் ராஜ்ய சபா தேர்தலில் வெற்றி பெற்றனர்.