Coromandel Express Accident : "பெட்டிகள் முழுவதும் குலுங்கியது... குழந்தைகள் சீட்டிற்கு அடியில் சிக்கினர்" - கோரமண்டல் ரயில் பயணி பகீர் தகவல்...!
ஒடிசாவின் பாலசோரில் நேற்று மாலை 7 மணியளவில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிர்ஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது.
ஒடிசாவின் பாலசோரில் நேற்று மாலை 7 மணியளவில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிர்ஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்து நடந்த போது எந்தமாதிரியான சூழல் எதிர்கொள்ளப்பட்டிருக்கும் என்பது அனைவருக்கும் அச்சமாக இருக்கிறது. இது பற்றி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஏபிபி நாடுவிற்கு தொலைப்பேசி மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
”பயங்கரமாக குலுங்கியது”
அவர் கூறுகையில், ”கொல்கத்தாவில் இருந்து நேற்று மதியம் 3:20 மணிக்கு ரயில் புறப்பட்டது. பின்னர், பாலசோர் நகரில் உள்ள பஹானாகா ரயில் நிலையத்தில் மாலை 7 மணிக்கு ரயில் தடம் புரண்டது. ரயில் ஒன்றுக்கொன்று மோதும்போது பயங்கரமாக குலுங்கியது. ரயில் தடம்புரண்ட போது வண்டி முழுவதும் குலுங்கியது. சீட்டில் இருந்த நாங்கள் ஒருவருக்கு மேல் ஒருவர் விழந்துவிட்டோம். நான் இருந்த பெட்டி அப்படியே நின்றுவிட்டது.
ஆனால் வெளியே வந்த பார்த்தபோது பிற பெட்டிகள் எல்லாம் ஒன்றின் மேல் ஒன்று மோதி சேதமாகி கிடந்தது. நிறைய பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தார்கள். 7.30 மணியளவில் மீட்புக் குழுவினர் வந்துவிட்டனர். குறைந்தது 7 பெட்டிகளாவது விபத்தில் சிக்கி கிடந்து இருக்கலாம். விபத்து சேதம் மிகவும் மோசமாக இருந்தது.
மேலே உள்ள வயர் கட் ஆகி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இல்லையென்றால் உயிரிழப்பு இன்னும் மோசமாக இருந்திருக்கும். கோச்சை விட்டு வெளியே வரும் போது கரண்டில் பயணிகள் கால் வைத்து இருக்க நேரிடும். பெட்டிகள் கவிழ்ந்ததால் பக்கவாட்டில் இருந்த மின்சாரபோல்கள் சரிந்து விட்டன” என்று தெரிவித்தார்.
குழந்தைகள் சிக்கித் தவிப்பு
மேலும், மற்றொரு பயணியான தஞ்சாவூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கூறுகையில், ”கொல்கத்தாவில் இருந்து நேற்று மதியம் 3:20 மணிக்கு ரயில் புறப்பட்டது. பின்னர், பாலசோர் நகரில் உள்ள பஹானாகா ரயில் நிலையத்தில் மாலை 7 மணிக்கு ரயில் தடம் புரண்டது. நான் பி7 பெட்டியில் பயணம் செய்தேன். இதில் சுமார் 22 பேர் பயணம் செய்தோம். ரயில் தடம்புரண்டபோது பயணிகள் அனைவரும் ஒருவரைக்கொருவர் மீது விழுந்ததோடு, குழந்தைகள் அனைவரும் இருக்கைக்கு அடியில் சிக்கித் தவித்தனர். இதனால் குழந்தைகள் அதிகளவில் சிக்கினர்.
அதேபோன்று, நான் இருந்த பி7 பெட்டிக்கு அருகில் இருந்த பி6 பெட்டி அதிக சேதம் அடைந்தன. அதில் இருந்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே மீட்புக் குழுவினர் விரைந்து வந்த பணிகளை தொடங்கினர்” என்று கூறினார்.
கோர விபத்து
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அருகில் செல்லும் மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதே வழித்தடங்களில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலும், சரக்கு ரயில் ஒன்றும் தடம் புரண்ட பெட்டிகள் மீது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக மாநில, தேசிய மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ரயில் விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்தில் இதுவரை இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 900 பயணிகள் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.