Hijab Issue: `ஹிஜாப் மீதான தடை நீடிக்குமா?’ - நாளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு!
கர்நாடக மாநிலத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ள ஹிஜாப் வழக்கில் நாளை (மார்ச் 15) அன்று காலை 10.30 மணிக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதைக் கர்நாடக அரசு தடை செய்துள்ளதை அடுத்து, அங்கு மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் நாளை (மார்ச் 15) அன்று காலை 10.30 மணிக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 2 வாரங்களுக்கு இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்துள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 25 அன்று, கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தீர்ப்பு அளிப்பதைத் தள்ளி வைத்திருந்தது. வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவது தங்கள் உரிமை என்பதால் அதற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளின் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவின் மீது இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
ஹிஜாப் அணிவதற்குப் பாதுகாப்பு கோரியுள்ள முஸ்லிம் மாணவரிகளின் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத், `முஸ்லிம் மாணவிகள் கல்வி உரிமையே முக்கியம்; அது பின்னுக்குத் தள்ளப்படுகிறது’ எனக் கூறியுள்ளார்.
Karnataka High Court to pronounce judgment in Hijab row case tomorrow. pic.twitter.com/NIhB0ib2CE
— ANI (@ANI) March 14, 2022
கடந்த பிப்ரவரி 10 அன்று, கர்நாடக உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தரவில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்லூரி வளர்ச்சிக் கமிட்டிகளால் நடத்தப்படும் கல்லூரிகள் ஆகியவற்றில் ஹிஜாப் உள்பட மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து வரும் மாணவர்கள் அனுமதிக்கப்படக் கூடாது எனக் கூறப்பட்டிருந்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அரசுக் கல்லூரி ஒன்றில் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிந்த 6 மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பிறகு இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியது.
ஹிஜாப் அணிந்த மாணவிகள் கல்லூரியின் விதிகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் ஹிஜாப் உடைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றதோடு, இந்து மாணவர்கள் காவி நிற ஷால்களை ஹிஜாப் அணிவதற்கு எதிராக அணிந்து கல்வி நிறுவனங்களில் போராட்டங்களையும் நடத்தினர். மேலும், இந்த விவகாரத்தில் கர்நாடக மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் போராட்டங்கள் வெடித்ததால் கர்நாடக அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்து உத்தரவிட்டது. ஹிஜாப் மீதான தடை காரணமாகவும், அரசு உத்தரவுக்கு ஆதரவான போராட்டங்கள் காரணமாகவும் கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் வகுப்புவாத மோதல்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டு, காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.