தாயைவிட பெரிய சக்தி எதுவும் இல்லை.. புலியோடு சண்டையிட்டு குழந்தையை மீட்ட அம்மா!
மத்தியப் பிரதேசத்தில் தனது 15 மாத குழந்தையை காப்பாற்றுவதற்காக பெண் ஒருவர் வெறும் கைகளால் புலியை எதிர்த்துப் போராடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் தனது 15 மாத குழந்தையை காப்பாற்றுவதற்காக பெண் ஒருவர் வெறும் கைகளால் புலியை எதிர்த்துப் போராடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் அசாத்தியமான துணிச்சலுக்குப் பரவலான பாராட்டுகள் பெற்று வருகிறார். வனக் காவலர்கள் மற்றும் யானைகள் மூலம் புலி கிராமத்தை விட்டு துரத்தப்பட்டது.
Her Son In Tiger’s Jaws, Madhya Pradesh Woman Fought It With Bare Hands https://t.co/cprIIA7QtN
— Kunal Shah (@kunal___shah) September 7, 2022
ஞாயிற்றுக்கிழமை இரவு, 25 வயதான அர்ச்சனா சௌத்ரி, தனது மகனை பணியில் இருந்து விடுவிப்பதற்காக தனது வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அருகிலுள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் இருந்து வழி தவறி வந்ததாகக் கருதப்படும் ஒரு புலி, வயல்களில் மறைந்திருந்து அவர்களைத் தாக்கியுள்ளது.
அப்போது, புலி தனது தாடையில் அக்குழந்தையைப் பிடித்துள்ளது. ஆனால், புலியுடன் சண்டையிட்டு கத்தி, கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க முயன்றுள்ளார் அர்ச்சனா. புலி சிறுவனை பறிக்க முயன்றது. ஆனால், அர்ச்சனா விடவில்லை. தாயின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் விரைந்து வந்தனர்.
இறுதியாக, புலி காட்டுக்குள் தப்பி ஓடியது. அர்ச்சனாவின் வீடு, புலிகள் காப்பகம் மற்றும் தேசிய பூங்காவின் இடைப் பகுதியில் அமைந்துள்ளது. தாயின் நுரையீரலில் அடிப்பட்டுள்ளது. உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. குழந்தையின் தலை மற்றும் முதுகில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் மற்றும் அவரது மகன் இருவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.
"அவர் ஆபத்தில் இல்லை. குணமடைந்து வருகிறார். குழந்தையும் நன்றாக இருக்கிறது" என்று உள்ளூர் அலுவலர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை தொடர்ந்து புலியை தேடும் தீவிர பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவில் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வனக் காவலர்கள் மற்றும் பாந்தவ்கர் புலிகள் காப்பக ஊழியர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டதால், மூன்று நாட்களுக்குப் பிறகு புலி கிராமத்தை விட்டு வெளியேறியது.
"புலியை விரட்டும் பணியில் மூன்று யானைகள், யானை பாகன் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், இறுதியாக புலியை கிராமத்திற்கு வெளியே விரட்ட ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆனது" என உள்ளூர் அலுவலர் தெரிவித்துள்ளார்.
உலகில் உள்ள புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது. இந்தியாவில் 2014 மற்றும் 2019 க்கு இடையில் புலிகளின் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 225 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.