ரயிலில் மது அருந்தினால் கடும் அபராதம்! ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு: பயணிகள் கவனத்திற்கு!
மது அருந்திவிட்டு பயணிகள் தகராறில் ஈடுபட்டால், குறைந்தபட்சம் 6 மாத சிறை மற்றும் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம் - ரயில்வே நிர்வாகம்
இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

ரயில்வேயின் விளக்கம்
தற்போது, ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கிடையில், ரயில்களில் சில அசம்பாவித சம்பவங்களும் நடந்து வருகிறது. ரயில் படிகட்டுகளில் நின்று வருவது, அவசர கால செயினை இழுப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும், சில பயணிகள் ரயில்கள் மது அருந்திவிட்டு பயணம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதற்கு தற்போது இந்தியன் ரயில்வே விளக்கியுள்ளது.
இது குறித்து ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் கூறப்படுவதாவது, ரயில்களில் மதுபானத்தை எடுத்துச் செல்வதோ அல்லது உட்கொள்வதோ கடுமையான பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துகிறது. குடிபோதையில் இருக்கும் பயணிகள் சக பயணிகளிடம் தவறாக நடந்து கொள்ளலாம், சிரமத்தை ஏற்படுத்தலாம். இதானால், ரயில்களில் மது அருந்தவோ அல்லது மது எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மது அருந்த தடை
ரயில் ஊழியர்கள் கூட ரயிலில் பயணம் செய்யும்போது, மது அருந்த தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு செய்வது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. ஒரு பயணி மதுவை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை அவர்கள் எதிர்கொள்ளலாம் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதாவது, ரயில் மற்றும் ரயில் நிலையத்தில் மது அருந்தினால் முதல்முறையாக ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. அதே தவறை மீண்டும் செய்தால் ஒரு மாத சிறை மற்றும் ரூ.250 அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்பிறகும் தொடர்ந்து செய்தால், தண்டனை காலம் அதிகரிக்கலாம். அதே நேரத்தில், மது அருந்திவிட்டு பயணிகள் தகராறில் ஈடுபட்டால், குறைந்தபட்சம் 6 மாத சிறை மற்றும் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
மேலும், பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களில், ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க அல்லது சுற்றிப் பார்க்க ரயிலில் பயணிக்கும்போது, பயணிகள் எந்த சூழ்நிலையிலும் மது பாட்டில்களை கொண்டு வர வேண்டாம் என்று ரயில்வே எச்சரித்துள்ளது. எனவே, ரயிலில் பயணம் செய்யும்போது, மது அருந்துவதையும், மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





















