Gujarat elections 2022: 16 தொகுதிகளில் 50 கி.மீ தூரம் பிரதமர் ரோட் ஷோ - வீடியோ
குஜராத் தேர்தல் களை கட்டியுள்ளது. இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.
குஜராத் தேர்தல் களை கட்டியுள்ளது. இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் 16 தொகுதிகளை உள்ளடக்கிய 50 கி.மீ பகுதியில் இன்று பிரமாண்ட ரோட் ஷோ மேற்கொண்டார். சாலை நெடுகிலும் மக்கள் திரண்டிருந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.
Prime Minister Shri @narendramodi's road show in Ahmedabad. #गुजरात_बोले_भाजपा_फिरसे https://t.co/0UcrBph6aX
— BJP (@BJP4India) December 1, 2022
மணிநகரில் தீனதயாள் உபோத்யாயா சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
57 சதவீத வாக்குப்பதிவு:
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. முதற்கட்டமாக 89 தொகுதிகளில் நடந்த தேர்தலில், மொத்தம் 57 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. பிற்பகல் 3 மணிவரை 48.48 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது. 8 மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குபதிவு நடைபெற்றிருந்த நிலையில், மாலை 5 மணி வரை நடந்த தேர்தலில் 57 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
வாக்காளர்கள் விவரம்:
முன்னதாக இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய முதல் கட்ட வாக்குப்பதிவு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இன்றைய தேர்தலில் மொத்தம் 2.39 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆண்கள் 1 கோடியே 24 லட்சத்து 33 ஆயிரத்து 362 பேரும், பெண்கள் 1 கோடியே 15 லட்சத்து 42 ஆயிரத்து 811 பேர் இருந்தனர்.
முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ், ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. வேட்பாளர்கள் தேர்வை பொறுத்தவரை, முன்னாள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், 5 அமைச்சர்கள், சபாநாயகர் உள்பட 42 எம்எல்ஏகளுக்கு பாஜக இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுத்துள்ளது. இதன் காரணமாக, கடும் உட்கட்சி பூசலில் பாஜக சிக்கி தவித்து வரும் நிலையில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
வாய்ப்பு மறுக்கப்பட்ட பலர் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர். இதனால், சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவின் 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை அக்கட்சி சஸ்பெண்ட் செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கிட்டத்தட்ட 25ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், ஏழாவது முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற வரலாறு படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் இந்த தேர்தல் களத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி என அனைவரும் கடுமையாக போட்டியிடும் நிலையில், வெற்றி பெறுவது சவால் மிகுந்ததாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 89 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.