![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Gujarat Election 2022:தேர்தலில் வெற்றிபெற பிரதமர் மோடி உதவ வேண்டும்... ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் இசுதன் காத்வி
”அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசியல் கட்சியில் என்னைப் போன்ற ஒரு எளிய விவசாயியின் மகனுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது” - இசுதன் காத்வி
![Gujarat Election 2022:தேர்தலில் வெற்றிபெற பிரதமர் மோடி உதவ வேண்டும்... ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் இசுதன் காத்வி Gujarat Assembly Election 2022 AAP CM Face Isudan Gadhvi Says PM Modi Should Help Us In Forming Govt In Gujarat Gujarat Election 2022:தேர்தலில் வெற்றிபெற பிரதமர் மோடி உதவ வேண்டும்... ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் இசுதன் காத்வி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/04/7dbd7e15d0e7f6dad2820783bae373991667562462739574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வரவிருக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இசுதான் கத்வியை முதலமைச்சர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இச்சூழலில் நமது ABP செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இசுதன் காத்வி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
குஜராத் முதலமைச்சர் வேர்ட்பாளர் இசுதன் காத்வி
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் இசுதன் காத்வியை இன்று அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், குரல் அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலம் அம்மாநில மக்கள் கட்சிக்கு அளித்த கருத்துகளின் அடிப்படையில் காத்வியின் அறிவிக்கப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் முன்னதாகத் தெரிவித்துள்ளனர்.
எளிய விவசாயியின் மகன்
40 வயதான இசுதன் காத்வி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். முன்னதாக குஜராத் முதலமைச்சர் வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என்பது குறித்து ஆம் ஆத்மி கட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் முன்னாள் பத்திரிக்கையாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான இசுதன் காத்வி 73 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
இன்று காலை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காத்வி, "அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசியல் கட்சியில் என்னைப் போன்ற ஒரு எளிய விவசாயியின் மகனுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது" என தனது உணர்ச்சிகரமான உரையில் தெரிவித்திருந்தார்.
’பிரதமர் மோடி உதவ வேண்டும்’
இந்நிலையில், நமது ABP செய்தி ஊடகத்திடம் முன்னதாகப் பேசிய காத்வி, ”குஜராத்தில் ஆட்சி அமைக்க பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு உதவ வேண்டும். குஜராத் பாஜகவினர் மோடி குறித்து அவதூறாகப் பேசுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸுடன் கூட்டணி சாத்தியமா என்ற கேள்விக்கு, குஜராத் மக்களுடன் தான் எங்களது கட்சி கூட்டணி அமைக்கும் என்றும் காத்வி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நம்மிடம் பேசிய இசுதன் காத்வியின் மனைவி “வரவிருக்கும் புதிய பொறுப்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்"எனவும் தெரிவித்துள்ளார்.
2 கட்டத் தேர்தல்
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (நவ.03) அறிவித்தது. 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும்.
குஜராத் மாநிலத்தில் 1998ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சிக்கட்டிலில் இருந்து வருகிறது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
நேற்று (நவ.03) தேர்தலில் போட்டியிடும் 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டது. பாஜகவும் தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்து வருகிறது. குஜராத் தேர்தல் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சி விரைவில் கூட்டத்தை கூட்டவுள்ளது.
பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இம்முறை குஜராத் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)