பள்ளியிலேயே நேர்ந்த கொடூரம்.. சிறுமிக்கு நடந்த சித்ரவதை.. வெளிச்சத்திற்கு வந்த குற்றம் என்ன?
தெற்கு மும்பையில் உள்ள பள்ளி வளாகத்தில் மைனர் மாணவியை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பின்தொடர்ந்து சென்ற குற்றச்சாட்டின் பேரில் 28 வயது பள்ளியின் பியூனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெற்கு மும்பையில் உள்ள பள்ளி வளாகத்தில் மைனர் மாணவியை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பின்தொடர்ந்து சென்ற குற்றச்சாட்டின் பேரில் 28 வயது பள்ளியின் பியூனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை விவரித்து பேசிய காவல்துறை அலுவலர் ஒருவர், "15 வயது சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த பெற்றோர், அவர் படித்த கான்வென்ட்டைத் தொடர்பு கொண்டுள்ளனர். இதையடுத்து, இந்தக் குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது.
செப்டம்பர் 5 ஆம் தேதி, பியூன் சிறுமியை தனியாகக் சந்தித்து தகாத முறையில் தொட்டதாகக் கூறப்படுகிறது. அன்றிலிருந்து, குற்றம் சாட்டப்பட்டவர் காம்தேவி பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். இதையடுத்து, காம்தேவி காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் புகார் அளித்தது.
பள்ளி வளாகத்தில் மாணவியை பியூன் பலமுறை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் மொபைல் எண்ணிலும் வீடியோ கால் செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வெள்ளிக்கிழமை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 354-A (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 354-D (பின்தொடர்தல்), மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, தொழில்நுட்ப உள்ளீடுகளின் உதவியுடன், வெள்ளிக்கிழமை அண்டை மாநிலமான பால்கர் மாவட்டத்தில் உள்ள விராரில் இருந்து குற்றவாளியை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளியை செப்டம்பர் 14ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார்" என்றார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கை உறுதி செய்கிறது. குறிப்பாக, இதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில் நாட்டிலேயே முதல் இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கடத்தல் (3948), கணவர்களால் கொடுமைப்படுத்துதல் (4674) மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (833) ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி அதிக எண்ணிக்கையில் உள்ளது.
டெல்லியில் 2021 ஆம் ஆண்டில் சராசரியாக தினமும் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.