Gautam Adani: “அமைதியின் மதிப்பு இந்தியாவிற்கு தெரியும்“ - ஆபரேஷன் சிந்தூரை பாராட்டிய கவுதம் அதானி
பாகிஸ்தான் திவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரை பாராட்டியுள்ள அதானி குழும தலைவர் கவுதம் அதானி, அமைதியின் மதிப்பு இந்தியாவிற்கு தெரியும் என புகழாரம் சூட்டியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற அதானி குழுமத்தின் 33-வது ஆண்டு விழா நிகழ்வில் பேசிய அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மிகவும் பாராட்டியுள்ளார். மேலும், அமைதியின் மதிப்பு இந்தியாவிற்கு தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் பேசியதன் முழு விவரங்களை இப்போது காணலாம்.
கவுதம் அதானி என்ன பேசினார்.?
ஏப்ரல் 22-ம் தேதி, காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது, ‘ஆபரேஷன் சிந்தூர்‘ என்ற பெயரில் இந்தியா துல்லிய தாக்குதலை நடத்தியது குறித்து பேசிய கவுதம் அதானி, ஆபரேஷன் சிந்தூரின் போது, நமது வீரர்களும், வீராங்கனைகளும் நிமிர்ந்து நின்றதாக புகழாரம் சூட்டியுள்ளார். அவர்கள் அப்படி நின்றது புகழுக்காகவோ, மெடல்களுக்காகவோ அல்ல, கடமைக்காக என அவர் பாராட்டினார்.
அவர்களது வீரம், அமைதி எளிதில் கிடைக்காது, நாம் தான் அதை சம்பாதிக்க வேண்டும் என்பதை காட்டியதாக அவர் கூறியுள்ளார். நாம் கணவு காண்பது, கட்டியெழுப்புவது, வழிநடத்துவது எல்லாம், நம்மை பாதுகாப்பவர்களின் தோள்களில் உள்ளதாக கவுதம் அதானி குறிப்பிட்டார். யாராவது நம் மீது கண்ணைக் காட்டினால், அவர்களது பாஷையிலேயே அவர்களை திருப்பி அடிப்போம் என்பதை ஆபரேஷன் சிந்தூர் காட்டியதாக அவர் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூரில் அதானி ட்ரோன்கள்
ஆபரேஷன் சிந்தூரில் அதானி நிறுவன தயாரிப்பு ட்ரோன்கள் பங்கெடுத்ததாக கவுதம் அதானி கூறினார். ஆபரேஷன் சிந்தூருக்கு தேவை ஏற்பட்டபோது, தங்கள் நிறுவனம் அதை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
தங்களது ட்ரோன்கள், வானத்தில் இருந்து கண்காணித்த கண்களாகவும், அதே சமயத்தில் தாக்குதலுக்கான வாளாக இருந்ததாகவும் கூறிய அவர், தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு நமது படைவீரர்களையும், மக்களையும் காப்பாற்ற உதவியதாக கவுதம் அதானி பெருமிதம் தெரிவித்தார். மேலும், இந்தியாவிற்கு ஒரு தேவை என்றால் அதற்காக நாங்கள் இயங்குவோம் என கூறினார்.
இந்த நிகழ்வின்போது, அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி நிகழ்ந்த ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார். அந்த ஒரு விபத்தில் ஏராளமான கனவுகள் மவுனமாக்கப்பட்டதாக கவுதம் அதானி வேதனை தெரிவித்தார். அந்த விமான விபத்தில் 259 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.





















