Ambedkar: அம்பேத்கரும் பெண் சமத்துவமும்.. சாதிய பாகுபாடுகளை அடிக்கோடிட்டு காட்டிய மாபெரும் ஆளுமை !
சட்டமேதை அன்னல் அம்பேத்கரின் 131ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் சிலைகள் இருக்கும் மாபெரும் தலைவர் அம்பேத்கர் தான். அந்த சிலைகளில் அவரின் கம்பீரமான தோற்றம் மற்றும் கையிலிருக்கும் புத்தகம் தான் சிறப்பான அம்சம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் முதன்மையானவர் அம்பேத்கர். அவரின் ஆற்றலால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. தனது சிறுவயதில் சந்தித்த சாதிய ஒடுக்கு முறைகளால் மனம் தளராமல் அம்பேத்கர் சாதித்தார். அவரின் வாழ்க்கை வரலாறு அனைவருக்கும் பெரிய பாடமாக அமைந்துள்ளது. அம்பேத்கர் என்றால் அவரை பட்டியலின தலைவர் என்றும், அவர் பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக போராடியவர் என்பது மட்டுமே மேலோங்கி இருக்கிறது.
ஆனால் இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பும் பின்னரும் பெண்களுக்கான சமத்துவதற்காக போராடியவர்களில் அம்பேத்கர் தான் முன்னோடியானவர். அவரின் ஆற்றல் மிகுந்த கட்டுரைகள் இதனை தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்த போது பெண்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளுக்கு ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யா சாகர் உள்ளிட்ட தலைவர்கள் போராடினர். அவர்கள் அனைவரும் சத்தி, குழந்தை திருமணம், விதவை திருமணம் உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து போராட்டம் நடத்தினர். இதற்காக சமூகத்தில் மாற்றத்தையும் விதைத்தனர்.
எனினும் அவர்கள் யாரும் தங்களின் போராட்டங்களில் இந்த பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக இருந்த சாதியை உள்ளடக்கவில்லை. இதனை தனது ‘சாதி ஒழிப்பு’(Annhiliation of Caste) என்ற கட்டுரையில் அம்பேத்கர் சுட்டிக் காட்டியுள்ளார். அப்போது நடைபெற்ற சமூக சீர்திருத்த முன்னெடுப்புகள் அனைத்தும் சாதி சமுத்துவம் மற்றும் கீழ் சாதி பெண்கள் ஆகியவற்றை சேர்க்கவில்லை. எனவே அந்த போராட்டங்களை சமூக சீர்திருத்த இயக்கம் என்று அழைக்க முடியாது என்று அம்பேத்கர் தனது கட்டுரையில் தெளிவாக விவரிக்கிறார்.
இதன்பின்னர் 1916ஆம் ஆண்டு இந்தியாவின் சாதிகள்: முறை மற்றும் வளர்ச்சி (Caste in India: Their Mechanism, Genesis and Development) என்ற கட்டுரையின் மூலம் சாதியும் பாலினம் எவ்வாறு பினைக்கப்பட்டுள்ளது என்று அம்பேத்கர் தெரிவிக்கிறார். இந்தக் கட்டுரையில் குலப் பிரிவினருடன் நடக்கும் திருமணங்கள் (Endogamy) தான் இந்தியாவில் சாதி இருப்பதற்கு முக்கிய காரணம் என்று கூறுகிறார்.
அத்துடன் இந்தக் குலப் பிரிவினருடன் மட்டும் தான் திருமணம் என்ற பழக்கத்தால் தான் பெண்கள் சத்தி, குழந்தை திருமணம், விதவை பிரச்னை உள்ளிட்டவை பெண்களுக்கு வருவதாக அம்பேத்கர் தெரிவிக்கிறார். இதன்மூலம் சாதி அமைப்பின் செயல்பாடுகள் அந்த சமூகத்தின் பெண்கள் மீது கட்டமைப்படுகிறது என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். மேலும் சாதி ரீதியிலான கட்டமைப்புகள் தான் பாலின சமத்துவதற்கு எதிராக அமைகிறது என்று அவர் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
பெண்களின் பிரச்னைகளை தீர்க்க முடிவு எடுக்கும் இடத்தில் பெண்கள் வந்தால் முடியும் என்பதை அம்பேத்கர் உறுதியாக இருந்தார். இதனால் அவரின் கூட்டங்கள், பேச்சுக்கள் மற்றும் கட்டுரைகளில் பெண்களுக்கு சம உரிமை அளித்தார். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், 1951ல் பெண்களுக்கு சமமான உரிமை அளிக்கும் இந்து குறியீடு மசோதவை(Hindu code Bill) கொண்டு வந்தார். இந்த மசோதாவிற்கு அப்போது நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்தது. இதனால் இந்த மசோதா நிறைவேற்றப்பட வில்லை. இந்த மசோதா நிறைவேற்ற படாததால் தனது அமைச்சர் பதவியை அம்பேத்கர் ராஜினாமா செய்தார்.
தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு அம்பேத்கர் , “வர்கங்களுக்கு இடையே இருக்கும் சமத்துவின்மை மற்றும் பாலினங்களுக்கு இடையே இருக்கும் சமத்துவின்மை ஆகியவை இந்திய சமுதாயத்தில் முக்கிய பிரச்னைகள். இந்த இரு பிரச்னைகளை தீர்க்காமல், நாம் எத்தனை மசோதாக்களை சட்டமாக்கினாலும் பயன் இல்லை. அவை அனைத்தும் சாணி குவியல்கள் மீது கூடாரம் கட்டுவதை போல் இருக்கும்” எனத் உறுதியாக கூறினார்.
அம்பேத்கரின் இந்து குறியீடு மசோதாவில் பெண்களுக்கு சொத்துகளில் சம உரிமை அளிப்பது ஆகியவற்றை முன்வைத்தார். மேலும் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை அந்த சமுதாயத்தின் பெண்களின் வளர்ச்சியை வைத்து தான் எடை போட வேண்டும் என்ற கருத்தில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். அவருடைய பிறந்தநாளில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் சமுதாயத்தை நோக்கி நாம் நிச்சயம் பயணிப்பதே பாபசாகிப் அம்பேத்கருக்கு நமது சிறப்பான பெருமையாகும். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இன்று சமத்துவ நாளாக கடைபிடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்