Gaganyaan: விண்வெளிக்கு செல்லும் இந்தியர்கள்: பத்திரமாக இறங்குவதற்கு அசத்தல் கருவி.. பக்கா பிளான் போட்ட இஸ்ரோ!
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், தற்போது இந்த மிஷன் பற்றி முக்கிய அப்டேட்டை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
Gaganyaan: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், தற்போது இந்த மிஷன் பற்றி முக்கிய அப்டேட்டை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஜூலை 23ஆம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
ககன்யான் திட்டம்:
இதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று, மகத்தான சாதனை படைத்துள்ள இந்தியா, அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறது. இந்தியாவின் 40 ஆண்டுகால ஏக்கத்திற்கு இஸ்ரோ விரைவில் முற்றுப்புள்ளி வைக்க உள்ளது. அதாவது, விண்வெளிக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் தன் முதல் ஏவுகணையான ககன்யானை அடுத்து ஆண்டு செலுத்த உள்ளது.
ரூ. 10,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் மூலம், 3 பேர் கொண்ட இந்தியக் குழுவை ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பி அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பி கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்புகளால் உருவாகும் ககன்யானின் பகுதிகளை இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்து வருகிறது. ககன்யான் திட்டத்தின் மூலம் 400 கி.மீ. சுற்றுப்பாதைக்கு விண்கலத்தில் மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
மேலும், இந்த திட்டத்துக்கான சோதனைகள் இந்த மாதத்தில் தொடங்கும் என்று மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருந்தார். இந்த பணியின் இரண்டாம் கட்டமாக வியோமித்ரா என்ற பெண் மனித ரோபோவை விண்ணில் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இஸ்ரோ கொடுத்த அப்டேட்:
இந்நிலையில், இஸ்ரோ முக்கிய அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்வெளியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், வீரர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் வாகனத்தின் சோதனையை இஸ்ரோ தொடங்கி உள்ளது. விண்வெளிக்கு சென்ற பின்னர் வீரர்கள் மீண்டும் பூமிக்கு பத்திரமாக தரையிறங்கவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது தான் க்ரூ மாட்யூல் (Crew Model). இதனை தான் விரைவில் சோதித்து பார்க்க இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கான தேதி பற்றிய தகவல் வெளியாகவில்லை. இந்த சோதனையின்போது டெஸ்ட் ராக்கெட் பயன்படுத்தப்படும். அதாவது, ஒற்றை என்ஜின் கொண்ட இந்த ராக்கெட் ஆளில்லா க்ரூ மாட்யூலை வானுக்கு கொண்டு சென்று, 17 கி.மீ உயரத்தில் இருந்து கீழே விழும்.
அப்போது, ஒரு சிறிது தூரம் கீழே க்ரூ மாட்யூலில் உள்ள பாராசூட் விரிந்து வேகத்தை கட்டுப்படுத்திக் கொண்டு மெதுவாக தரையில் இறங்கும். ஹரிகோட்டவில் இருந்து 10 கி.மீ தொலைவில் பத்திரமாக தரையிறங்கும். பின்னர், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ ஆய்வகத்தில் இந்த மாட்யூல் பரிசோதிக்கப்படும் என்று இஸ்ரோ கூறியுள்ளது. இந்த சோதனையில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை ஏனில், இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் மிஷன் வெற்றியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.