GST Compensation: மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு; ரூ.40,000 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு!
முன்னதாக, கடந்த ஜூலை 15ம் தேதி இழப்பீடு பற்றாக்குறையாக கடன் திட்டத்தின் கீழ் ரூ. 75,000 கோடியை மத்திய அரசு வழங்கியது
சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ 40,000 கோடியை இந்திய அரசு வழங்கியுள்ளது, தமிழ்நாட்டிற்கு ரூ 2,036.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஜூலை 15ம் தேதி இழப்பீடு பற்றாக்குறையாக கடன் திட்டத்தின் கீழ் ரூ. 75,000 கோடியை மத்திய அரசு வழங்கியது. இதன்மூலம், இந்த நிதியாண்டிற்கான, 72% இழப்பீடுத் தொகையை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
கடன் உதவி வழங்கும் திட்டம்:
101-வது அரசியல் சட்டம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு ஈடுசெய்தல்) சட்டம் 2017 ஆகியவற்றில், ஜிஎஸ்டி சட்டத்தைச் செயல்படுத்துவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு 5 ஆண்டுகளுக்கு ஈடுசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், வருவாய் இழப்பீட்டினை ஈடுசெய்ய முடியாத சூழல் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. மேலும், வசூல் செய்யப்பட்ட ஈடுசெய்தல் நிதியை, சம்பந்தப்பட்ட ஜிஎஸ்டி மாநிலங்களுக்கு ஈடுசெய்யும் நிதியில் (Compensation Cess) வரவு வைக்காமல், இந்தியத் தொகுப்பு நிதியில் வைத்துக் கொண்டு, 47 ஆயிரத்து 272 கோடி ரூபாயை வேறு செலவுகளுக்கு மத்திய அரசு பயன்படுத்தி விட்டது என்று சிஏஜி அமைப்பு தெரிவித்தது.
இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி முறையை அமல்படுத்தியதால் ரூ.1.10 லட்சம் கோடி அளவிலான வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பில் சிறப்பு சாளரம் ஒன்றின் மூலம் கடன் உதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது.
இழப்பீட்டை எதிர்கொள்வதற்கான நிதியை கடன் வசதியின் மூலம் வழங்கும் ஏற்பாடுகளுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் (சட்டமன்றங்களுடன் கூடிய) யூனியன் பிரதேசங்கள் ஒப்புக்கொண்டன. இதனையடுத்து, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பாக இந்த சிறப்பு சாளரத்தின் வாயிலாக இந்திய அரசு கடன்களைப் பெறுகிறது. அதன்படி, 2020-21ம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ.1.10 லட்சம் கோடி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 28.05.2021ம் தேதி நடந்த 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து, 2021-22 நிதியாண்டில் கடன் ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசு ரூ.1.59 லட்சம் கோடி கடன் பெற்று, மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையுடன் கூடிய மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இதுவரை 1,15,000 கோடி வழங்கப்பட்டது.
செஸ் வரி வசூலில் இருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்கு கூடுதலாக மேற்கண்ட தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையில் தாக்கம் எதையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கையால் மத்திய அரசின் கடன் அளவு அதிகரிக்காது என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
சுயசார்பு திட்டத்தின் கீழ் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதம் அளவுக்கு கூடுதலாக கடன் பெறுவது இந்த திட்டத்தினால் கணிசமாக குறையக் கூடும் என்றும், நிதி அமைச்சகம் கூறியுள்ளது.