Loan Recovery: கடன் கட்டாதவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் வங்கிகள்: அதிரடி காட்டிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
கடனை வசூலிப்பவர் பற்றிய புகார்கள் வந்தால், அப்படிப்பட்ட ஏஜென்ட்களை பணியில் ஈடுபடுத்தும் வங்கிக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்திருந்தது.
கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பித்து செல்லும் பணக்காரர்கள், எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஏகபோகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாங்கிய பணம் வாராக்கடனாக அறிவிக்கப்படுகிறது. அவர்களை, இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் இந்திய அரசு திணறி வருகிறது.
கடன் வாங்கியவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் வங்கிகள்:
ஆனால், படிப்பதற்காகவும் வீடு வாங்குவதற்காகவும் கடனை வாங்குபவர்கள், கடனை திரும்பி செலுத்தவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக வங்கிகள் கடும் நடவடிக்கையினை எடுக்கிறது. கடனை வசூலிக்க செல்லும் நபர்கள், எந்த வித கருணையும் இன்றி வாடிக்கையாளர்களை நடத்துகிறார்கள்.
அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதை தடுக்க மத்திய அரசு, பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, கடந்த 2008ஆம் ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளை எச்சரித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதிரடி உத்தரவிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்:
கடனை வசூலிப்பவர் பற்றிய புகார்கள் வந்தால், அப்படிப்பட்ட ஏஜென்ட்களை பணியில் ஈடுபடுத்தும் வங்கிக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்திருந்தது.
மேலும், கடன் வசூலிக்கும் முறைகளை அவ்வப்போது ஆய்வு செய்யவும், வழிகாட்டுதல்களை மேம்படுத்த கருத்து/ பரிந்துரைகளை வழங்கவும் வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டு கொண்டது. வாடிக்கையாளர்களை துன்புறுத்தும் ஏஜென்ட்கள் பணியமர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, வங்கிகளுக்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி தொடர் அறிவுறுத்தல்களை வழங்கி வந்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று பதில் அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கடனை வசூலிக்கும்போது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும், இதுபோன்ற வழக்குகளை மனிதாபிமானத்துடனும் உணர்வுகளை புண்படுத்தாமல் கவனமுடன் கையாள வேண்டும் என்றும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது" என்றார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பதில் அளித்து பேசிய அவர், "சில வங்கிகள் எவ்வளவு இரக்கமின்றி கடனை திருப்பி வாங்குகின்றன என்பது பற்றிய புகார்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கடனைத் திருப்பிச் செலுத்தும்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடாது என்றும், மனிதாபிமானத்துடனும், உணர்வுப்பூர்வமாகவும் இந்த விஷயத்தை அணுக வேண்டும் என்று பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது" என்றார்.
நிலுவையில் உள்ள கடன் தொகையை வங்கிகள் திரும்பப் பெற வேண்டுமானால், சட்டப்படி நிறுவப்பட்ட நடைமுறையின்படி அதை வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம், கடன் வசூலிக்கும் முகவர்கள் குறித்த விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, RBL வங்கிக்கு 2.27 கோடி ரூபாய் அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி.