EWS Quota EXPLAINED: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% ஒதுக்கீடு அறிமுகமானது எப்படி? விமர்சனங்களுக்கு ஆளாவது ஏன்?
EWS 10 Percent Reservation: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கடும் சர்ச்சைக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாவது ஏன்?
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீட்டைத் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் நேற்று (நவம்பர் 7) தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய திமுக உள்ளிட்ட கட்சிகள், இந்தத் தீர்ப்பு சமூக நீதிக்கு மிகப்பெரும் பின்னடைவு என்று தெரிவித்துள்ளன.
இத்துடன் பாமக, விசிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சர்ச்சைக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாவது ஏன்? பார்க்கலாம்.
அது என்ன 10 சதவீத இட ஒதுக்கீடு?
சாதியின் அடிப்படையில் பல அடுக்குகளாக சமூகம் பிரிந்துகிடந்த சூழலில், மக்களிடையே பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சமுதாயத்தை சமப்படுத்தும் முயற்சியாக இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது.
1921-ல் நீதிக் கட்சி இயக்கம் சார்பில், பிராமணர்கள் அல்லாதோருக்கு ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாணை எண் 613 கொண்டு வரப்பட்டு, பிராமணர்கள் அல்லாதவர்கள் வகிக்கும் பதவிகளின் விகிதம் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுதந்திரத்துக்குப் பிறகு அரசியல் சாசன நிர்ணய சபை சார்பில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே 2019ஆம் ஆண்டில் 103ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், அரசமைப்பு சட்டப் பிரிவு 15(6) மற்றும் 16(6) ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டை (EWS reservation) பாஜக அரசு அறிமுகம் செய்தது. எனினும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் எஸ்சி / எஸ்டி வகுப்பினருக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டில் இடமில்லை.
அரசியல் சாசன சட்டப் பிரிவு 15, மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுக்கிறது. சட்டப் பிரிவு 16 பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும் என்கிறது. இந்த நிலையில், 103ஆவது சட்டத் திருத்தம் EWS இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது.
இந்த இட ஒதுக்கீடு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.சின்ஹோ தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆணையத்தை 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைத்தது. இந்த ஆணையத்தின் அறிக்கை 2010 ஜூலை மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.
காலத்துக்கு ஏற்ற வகையில் பொதுப் பிரிவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்கள் அனைத்தும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC- economically backward classes) என்று அடையாளம் காணப்பட வேண்டும் என்று சின்ஹோ ஆணையம் கூறியது. அனைத்து வகையான வருமானங்களையும் சேர்த்து, வரி விதிப்புக்குக் கீழான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பின் கீழ் வரும் என்றும் ஆணையப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் 2019-ல் பாஜக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தது. இதன்கீழ் சலுகைகளை அனுபவிக்க சில தகுதிகளும் குறிப்பிடப்பட்டன.
என்ன தகுதி?
* ரூ.8 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்டவர்கள்,
* 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் கொண்டவர்கள்,
* 1000 சதுர அடிக்கும் குறைவான வீட்டைக் கொண்டவர்கள்,
* 200 சதுர அடிக்கும் குறைவான குடியிருப்பு நிலத்தைக் கொண்டவர்கள் மட்டுமே இந்த ஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்கள்.
உயர் சாதியினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு
எனினும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் எஸ்சி / எஸ்டி வகுப்பினருக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டில் இடமில்லை. இதன்மூலம் உயர் சாதி வகுப்பினர் என்று சொல்லப்படும் மக்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று புகார் எழுந்தது.
இந்த நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. திமுகவும் தன்னை வழக்கில் இணைத்துக் கொண்டது.
வழக்கு பின்னணி
10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய திமுக, ''இதர எஸ்.டி, எஸ்.சி, ஓபிசி உள்ளிட்ட பிரிவிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் உள்ளனர். இந்நிலையில் ஏன் முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது? இந்தியாவில் இருக்கிற 33 சதவீதத்தினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. ஆகையால், மூன்றில் ஒரு பங்கு பிரிவினருக்கு இந்த இட ஒதுக்கீடு சென்று விடுகிறது.
இட ஒதுக்கீட்டின் நோக்கமே, பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு, கல்வியும் அரசு வேலையும் கிடைக்காமல் தடுக்கப்பட்டதற்கு, நிவர்த்தி செய்யும் வகையில் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் இட ஒதுக்கீடு திட்டமே பாதிக்கப்படும். வருமான அளவுகோலை வரையறை செய்ய அமைக்கப்பட்ட சின்ஹோ ஆணையத்தின் அடிப்படையாக வைத்து, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தவறு'' என்பன உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தது.
இந்த வழக்கை கடந்த 2019ஆம் ஆண்டு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கிட்டத்தட்ட ஆறரை மணி நேர விசாரணைக்குப் பிறகு இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நேற்றுடன் பணிக்காலத்தை முடித்த யு.யு.லலித் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியது.
இந்த நிலையில், ''சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்தில் இந்தத் தீர்ப்பு ஒரு பின்னடைவு. சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்'' என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூக நீதி மீதான பேரிடி
''இந்தத் தீர்ப்பானது சமூக நீதியின் மேல் விழுந்துள்ள பேரிடி. ஒருபுறம் இந்துக்கள் அனைவரும் ஒன்று என்று பேசிக்கொண்டே இந்து மதத்தில் இருக்கும் ஓபிசி மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக அரசு, முன்னேறிய வகுப்பினருக்காக மட்டுமே செயல்படும் அரசாக இருக்கிறது'' என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
''சமூக நிலையில் எந்த பின்னடைவையும் எதிர்கொள்ளாமல், அடக்குமுறைகளை அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில் மட்டும், அதுவும் கூட ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் என்று கூறி 10% இட ஒதுக்கீடு வழங்குவதும், அதை எந்த கேள்வியும் எழுப்பாமல் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதும் சமூக நீதியின் மீதான தாக்குதல்'' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
விமர்சனங்கள் ஏன்?
* சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவது ஏன் என்பது எல்லோரின் முதல் கேள்வியாகவும் உள்ளது.
* பொருளாதாரமும் நிதி நிலைமையும் ஆண்டுக்கு ஆண்டு மாறும் சூழலில், அதை மட்டுமே அளவுகோலாக வைத்து இட ஒதுக்கீடு வழங்குவது சரியல்ல என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
* இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காகவே பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையைச் சிலர் ஏற்படுத்தலாம் என்றும் அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
* சின்ஹோ ஆணையத்தில் பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய உயர்த்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று எந்த பரிந்துரையையும் அளிக்கவில்லை. அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கலாம் என்று மட்டுமே தெரிவித்துள்ளது.
* உயர்த்தப்பட்ட வகுப்பு ஏழைகளின் மக்கள் தொகையை அறிய எந்தக் கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்தவில்லை என்றும் அரசியல் அறிஞர்கள் வாதிடுகின்றனர்.
* பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பெரும்பாலானோருக்கு கிரீமி லேயர் அடிப்படையில் (OBC Creamy Layer) இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. அதே நேரத்தில் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ள உயர்த்தப்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
* பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், அதற்கான விதிமுறைகள் முறையாக உள்ளதா என்று விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக 5 ஏக்கர் நிலமும் ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய் வருமானமும் நிலம், வீட்டு மனை கொண்டவர்களுக்கு ஒதுக்கீடு தேவையா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.