Election Commissioners Appointment: தேர்தல் ஆணையர் நியமனம்.. தடை விதிக்க மறுப்பு.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
நேற்று, இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிடவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக கடந்தாண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது. நேற்று, இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிடவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம்:
இந்தியாவை பொறுத்தவரையில், தேர்தலை நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடமே உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல், மாநிலங்களவை தேர்தல், மாநில சட்டப்பேரவை தேர்தல் ஆகியவை தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில்தான் நடக்கிறது.
அதோடு, குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலையும் இந்திய தேர்தல் ஆணையமே நடத்துகிறது. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில், அந்தந்த மாநில தேர்தல் ஆணையங்களே நடத்துகின்றன. தன்னாட்சி அமைப்பாக இருக்கும் இந்திய தேர்தல் ஆணையம் தற்போது மூன்று பேர் கொண்ட அமைப்பாக இயங்கி வருகிறது.
பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் (அல்லது தனிப்பெரும் எதிர்க்கட்சி தலைவர்), இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் ஆகிய 3 பேர் கொண்ட உயர்நிலை குழு அளிக்கும் பரிந்துரையின்படி, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.
உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு:
ஆனால், கடந்தாண்டு, மத்திய பாஜக அரசு இதில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இந்திய தலைமை நீதிபதியை நீக்கும் வகையில் கடந்தாண்டு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக, புதிய தேர்தல் ஆணையர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர்.
ஆனால், தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்திய அரசுக்கு சாதகமாக சட்டத்திருத்தம் கொண்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்டது.
அப்போது, இடைக்கால உத்தரவுகளின் மூலம் சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இருப்பினும், தேர்தல் ஆணையரை நியமிக்கும் தேர்வுக் குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதி (CJI) நீக்கியது தொடர்பான மனுவில் எழுப்பப்பட்ட பிரச்னைக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து வழக்கின் விசாரணையை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து. கடந்தாண்டு, அனூப் பரன்வால் என்பவர் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையர் நியமன குழுவில் இந்திய தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆனால், சட்டத்தை கொண்டு வந்து நியமன குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை மத்திய அரசு நீக்கியது. இதற்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர் உள்பட பலர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.