Dinesh Karthik | ”பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியைப்போல” - சர்ச்சை கருத்துக்காக மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்
கிரிக்கெட் மட்டைகளை பக்கத்து வீட்டுக்காரர்களின் மனைவிகளுடன் ஒப்பிட்டு கூறிய கருத்துக்கு தினேஷ் கார்த்திக் மன்னிப்பு கோரினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக். ஐ.பி.எல். ஆட்டங்களில் பல்வேறு அணிகளுக்காக ஆடிய இவர், தற்போது கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார். இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் நடைபெற்ற இந்திய மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் போட்டி வர்ணணையாளராக தனது புதிய பணியையும் தொடங்கினார்.
இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் போட்டி வர்ணணையாளராக பணியாற்றினார். அப்போது, தினேஷ் கார்த்திக் “ எந்த பேட்ஸ்மேன்களுக்கும் தாங்கள் வைத்திருக்கும் மட்டைகள் பிடிப்பதில்லை. பல பேட்ஸ்மேன்களுக்கு தாங்கள் வைத்திருக்கும் மட்டைகள் பிடிப்பதில்லை. அடுத்த வீரர்கள் வைத்திருக்கும் மட்டைகளைதான் பெரிதும் விரும்புகிறார்கள்.
கிரிக்கெட் மட்டைகள் பக்கத்து வீட்டுக்காரர்களின் மனைவிபோல. நம்மிடம் இருப்பதை விட, இன்னொன்று சிறந்தது அழகானது என்று நினைக்கிறார்கள். எப்போதும் நம்மிடம் இருப்பதை விட இன்னொன்றுதான் சிறந்தது என்று நினைக்கிறோம்” என்றார். அவர் அவ்வாறு கூறியதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையே மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் வர்ணணையாளராக பணியாற்றிய தினேஷ் கார்த்திக், கடந்த போட்டியில் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரினார்.
அவர் கூறியதாவது, “கடந்த போட்டியின்போது நான் கூறிய கருத்துக்கு மன்னிப்புகேட்க விரும்புகிறேன். நான் மனதார அப்படி கூறவில்லை. அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் மனைவி மற்றும் என் அம்மாவும் இந்த செயலுக்காக என்னை மிகவும் திட்டினர். இன்னொரு முறை இப்படியொரு சம்பவம் நிகழாது.” இவ்வாறு அவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளாகவே கிரிக்கெட் வீரர்கள் இதுபோன்ற பெண்களை இழிவுபடுத்தும் விதமாக, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவது அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் பெண்கள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து அவர்கள் இருவருக்கும் கண்டனங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து வீரர் ஒல்லி ராபின்சன் 7 ஆண்டுகளுக்கு முன்பு டுவிட்டரில் பதிவிட்ட சர்ச்சைக்குரிய கருத்தால் அவருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் பொதுவெளியில் இதுபோன்ற கருத்தை தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான தினேஷ் கார்த்திக் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,025 ரன்களும், 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,752 ரன்களும், 32 டி20 போட்டிகளில் விளையாடி 399 ரன்களும், 203 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 3 ஆயிரத்து 946 ரன்களும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.