Flight Ticket Refund: விமான பயணிகளுக்கு ஒரு நற்செய்தி.. இனி 75% வரையில் கட்டணத்தை திரும்பப் பெறலாம்
விமான டிக்கெட்டை திரும்பப் பெறுவதற்கான புதிய விதிகள் வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என, விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.
பயணிகள் கோரிக்கை:
விமான டிக்கெட்டுகளை ரத்து செய்வது, திடீரென குறிப்பிட்ட விமானத்தில் ஏற முடியாமல் போவது போன்ற காரணங்களால், ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை திருப்பி வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து இருந்தனர்.
இழப்பீடு வழங்க புதிய விதிமுறைகள்:
இந்நிலையில், ஏதாவது ஒரு காரணத்தால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்படுவது, விமான சேவை ரத்து, விமானம் புறப்பட தாமதமாவது, முன்பதிவு செய்த விமானத்திற்கு பதிலாக வேறு விமானத்தில் அழைத்துச் செல்வது, முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுக்கானதை விட தற்செயலாக தரம் குறைந்த இருக்கை மற்றும் குறைந்த வகுப்பு இருக்கையில் அழைத்துச் செல்லப்படுவது போன்ற நிகழ்வுகளுக்கு, பயணிகளுக்கு குறிப்பிட்ட விமான நிறுவனத்திடமிருந்து இழப்பீடு வழங்க, விமானப் போக்குவரத்து இயக்குனரகம் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
For International Sector: 30% of the cost of ticket including taxes for flights of 1500km or less. 50% of the cost of ticket including taxes for flights between 1500km to 3500km. 75 % of the cost of ticket including taxes for flights more than 3500km: DGCA
— ANI (@ANI) January 25, 2023
75% வரை இழப்பீடு:
அதன்படி, உள்நாட்டு விமானத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டிற்கு உண்டான வகுப்பை விட, குறைந்த தரத்திலான வகுப்பில் பயணியை பயணிக்க செய்தால், அவருக்கு குறிப்பிட்ட விமான நிறுவனம், டிக்கெட் கட்டணத்தில் 75 சதவிகிதத்தை திருப்பி கொடுக்க வேண்டும். இதே தவறு சர்வதேச விமானத்தில் நிகழ்ந்தால் அவருக்கான இழப்பீடு என்பது, டிக்கெட் விலை, வரி விகிதம், எவ்வளவு தூரத்திற்கு அந்த விமானம் பயணிக்கிறது ஆகியவற்றை பொருத்து, 30 முதல் 75 சதவிகிதம், வரை மாறுபடும்.
பிப்.15ம் தேதி முதல் புதிய விதி அமல்:
முன்னதாக, அவ்வாறு முன்பதிவு செய்ததை காட்டிலும் தரம் குறைந்த பயணத்தை வழங்கினால், பாதிக்கப்பட்ட பயணிக்கு வரியுடன் சேர்த்து மொத்த கட்டண தொகையையும் விமான நிறுவனம் வழங்க வேண்டும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் வலியுறுத்தியது. தற்போது அதில் மாற்றம் செய்து இந்த புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. புதிய விதிமுறையானது பிப்ரவரி 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இழப்பீடு விதிமுறை:
ஆயிரத்து 500 கிலோ மீட்டர் அல்லது அதற்கு குறைந்த தூரம் பயணிக்கும் சர்வதேச விமானத்தில், முன்பதிவு செய்ததை காட்டிலும் குறைந்த தரத்திலான பயணத்தை வழங்கினால், பயனாளருக்கு வரியுடன் சேர்த்து 30 சதவிகிதம் கட்டணம் திருப்பி செலுத்தப்பட வேண்டும். அதே, விமானத்தின் பயண தூரம் ஆயிரத்து 500 முதல் மூவாயிரத்து 500 கிலோ மீட்டராக இருந்தால், 50 சதவிகிதம் வரை பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இந்த பயண தூரம் மூவாயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமானதாக இருந்தால், பாதிக்கப்பட்ட நபருக்கு டிக்கெட் கட்டணம் மற்றும் வரி ஆகியவற்றை சேர்த்து 75 சதவிகித இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என, விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.