Rahul Gandhi: பாலியல் தொல்லை குற்றச்சாட்டு விவகாரம்; ராகுல் காந்தி வீட்டில் விசாரணைக்கு குவிந்த போலீஸ்
காஷ்மீரில் பெண்கள் பாலியல் தொல்லைகளை எதிர்கொள்வதாக ராகுல்காந்தி கூறியது தொடர்பாக விசாரிக்க போலீசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பாலியல் தொல்லை குறித்து பேசியது தொடர்பாக விசாரணை நடத்த டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டில் ஏராளமான போலீசார் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி
இந்திய ஒற்றுமை பயணம் எனும் பெயரில் கடந்தாண்டு கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கிய பயணம்,கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் முடிந்தது. இறுதி நாளில் பேசிய ராகுல் காந்தி, ஜம்மு & காஷ்மீரில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக பேச பல பெண்கள் தன்னிடம் வேதனையுடன் கூறியதாக பேசியிருந்தார். ”இன்னும் கூட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். நான் ஒரு பெண்ணிடம் கேட்டேன். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி கூறினார். காவல் துறையில் புகார் அளிக்கலாமா? என கேட்டேன். அப்போது காவல்துறையை அழைக்க நான் வெட்கப்படுகிறேன்'' என அந்த பெண் கூறியதாக ராகுல் காந்தி பேசினார்.
ராகுல் காந்திக்கு நோட்டிஸ்:
ராகுல் காந்தி பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், கடந்த 16ம் தேதி டெல்லி போலீசார் அவருக்கு நோட்டிஸ் வழங்கினர். இந்த நோட்டீஸை வழங்க ராகுல் காந்தியை சந்திக்க போலீசார் 3 மணிநேரம் காத்திருந்தனர். ஆனால் ராகுல் காந்தியை போலீசாரால் சந்திக்க முடியவில்லை. அதன்பிறகு வீட்டில் ஒன்றரை மணிநேரம் காத்திருப்புக்கு பிறகு அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நபர்களின் விபரங்களை அளித்தால் போலீஸ் சார்பில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படும். ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் எதுவும் வழங்கவில்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு ராகுல் காந்தி பதில் ஏதும் அளிக்காமல் இருந்தார்.
ராகுல் காந்தியிடம் விசாரணை:
இந்நிலையில் தான் டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டிற்கே காவல்துறையினர் சென்றுள்ளனர். அவர்களில், டெல்லி காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் பலரும் அடங்குவர். சிறப்பு காவல் ஆய்வாளர் சாகர் பிரீத் ஹூடா தலைமையில் இந்த விசாராணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அங்கு அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு:
முன்னதாக இந்த நோட்டீஸ் குறித்து காங்கிரஸ் வெளியிட்டு இருந்த டிவிட்டர் பதிவில், “பிரதமர் மோடி மற்றும் அதானியின் உறவு குறித்து ராகுல்காந்தி கேட்ட கேள்விகளால் மத்திய அரசு பதற்றம் அடைந்துள்ளது. இதனால் காவல்துறைக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறது. பாரத் ஜோடோ யாத்திரை முடிந்து 45 நாட்கள் ஆகும் நிலையில் டெல்லி காவல்துறை தற்போது வந்து நோட்டீஸ் வழங்கி துன்புறுத்தல் மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்களை கேட்டுள்ளது” என சாடியிருந்தது.