Pak. Official Asked to Leave: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை, 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் தற்காலியமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை, நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காமில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை பாகிஸ்தானிற்குள் நிகழ்த்தியது. அங்குள்ள 9 தீவிரவாத நிலைகள் மீது, கடந்த 7-ம் தேதி அதிகாலையில் தாக்குதல் நடத்தி அழித்தது.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதலை தொடங்கியது. எல்லைப் பகுதிகளில், பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மற்றும் பீரங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்திய நிலையில், அதனை முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்குமிடையேயான போர் பதற்றம் அதிகரித்தது.
இரு நாடுகளுக்குமிடையேயான பதற்றம் அதிகரித்த நிலையில், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் சமரசம் செய்துவைக்க விருப்பம் தெரிவித்தன. ஆனால், இந்தியா அதற்கு பதில் கூறாமல், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகளை தகர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தது.
இந்நிலையில், அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து, இரு நாடுகளுக்குமிடையே பேச்சுவார்த்தையை முன்னெடுத்தது. இதையடுத்து, இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டன. எனினும், இது தற்காலிகமானதுதான், பயங்கரவாத செயல்கள் தொடர்ந்தால், எந்நேரமும் தாக்குதல் நடத்த இந்தியாவின் முப்படைகளும் தயாராகவே இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தூதரக அதிகாரி வெளியேற மத்திய அரசு உத்தரவு
இந்த சூழலில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவரை, 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்தி பணியாற்றும் அந்த அதிகாரி, அவரது பணிக்கு தகாத செயல்களில் ஈடுபட்டதால், அவரை வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த அதிகாரியின் நடவடிக்கைகள் குறித்து, பாகிஸ்தான் தூதரக உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.





















