கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பால் டெல்லியில் விரிவுபடுத்தப்பட்ட உடல் தகன மையம்..
நேற்று ஒரேநாளில் டெல்லியில் மட்டும் 359 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதனால் டெல்லியில் உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை முதல் அலையைவிட மிகவும் வீரியமாக உள்ளது. இதனால் நாள்தோறும் பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. நேற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.46 லட்சமாக இருந்தது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2624-ஆக இருந்தது. இதில் டெல்லியில் அதிகளவில் உயிரிழப்புகள் பதிவாகி இருந்தன. டெல்லியில் மட்டும் ஒரே நாளில் 359 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்ய போதிய இடம் இல்லாததால் தற்போது இருக்கும் இடத்தை மேலும் விரிவுபடுத்தி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தற்போது டெல்லியின் சாரா கேலா கான் பகுதியில் அமைந்துள்ள தகன மையத்திலுள்ள பூங்காவிலும் உடல்களை அடக்கம் செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு உடல் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஏற்கெனவே கடந்த ஒரு வாரமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருவதால் இதை நீட்டிக்க டெல்லி அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.