Covid In INDIA: மக்களே உஷார்; உயரும் தொற்று எண்ணிக்கை... இந்தியாவில் நான்காவது அலையா?
Covid In INDIA: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பதிவாகியுள்ள கொரோனா தொற்று எண்ணிக்கையின் அளவு, இந்தியாவில் நான்காவது அலை உருவாவதற்கான அறிகுறியா என அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு, இந்திய அரசும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஓமிக்ரானின் BF.7 மாறுபாட்டின் காரணமாக நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்திய அரசாங்கம் வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
ஆனால் தொற்று அதிகரித்து வருவதால் இந்தியாவில் கோவிட் நோயின் நான்காவது அலை இருக்குமா என்பது குறித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் அடுத்து வரும் 40-45 நாட்கள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் எனறும் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தது. சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கி உச்சம் பெற்று 40 நாட்களில் இந்தியாவிலும் தொற்று பரவல் கணிசமாக உயரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் வழக்கமாக சீனாவில் கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியதும் இந்தியாவில் அதன் தொடர்ச்சியாக ஓரிரு வாரத்தில் தொற்று பரவத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 188 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 4,46,79,319 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த வியாழக்கிழமை அதாவது நேற்று மட்டும் தொற்று பாதிப்பினால் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளது, இதனால் மொத்த எண்ணிக்கை 5,30,710 ஆக கொரோனா தொற்று பாதிப்பினால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்திய அளவில் தற்போது 2,554 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் செயலில் உள்ள கோவிட் கேஸ்லோடில் 16 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 0.10 சதவீதமாகவும், வாராந்திர தொற்று பாதிப்பு 0.12 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி:
இந்தியாவில் உள்ள பெரியவர்கள் அல்லது குழந்தைகள் மீது இந்த வைரஸ் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லை என்று மேலும் அவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், நாட்டின் மக்கள் தொகையில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். இது தவிர, தடுப்பூசி போடாத நபர்கள் மட்டுமே கொரோனா அலைகளின் போது நோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கும் இதனால் நோய் எதிர்ப்பு சத்து அதிகரித்துள்ள நிலையில் பாதிப்பு உண்டாவது குறைவு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளை பாதிக்குமா..?
கொரோனா வைரஸின் ஒமிக்ரான் BF.7 வகைமை சீனாவில் பெரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கொரோனாவே இல்லை என மறுத்த ஜீரோ கொரோனா கொள்கையின் விளைவாக இத்தகைய சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. நேர்மாறாக தடுப்பூசியை ஒரு சிறிய எண்ணிக்கையிலான சீன குடிமக்கள் மட்டுமே பெற்றுள்ளனர். ஆனால் இந்தியாவில் தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்தப்பட்டுக் கொண்டே வருகிறது. அதனால் ஒமிக்ரானின் மற்றோரு மாறுபாடான BF.7 சீனாவில் உள்ளதை விட இந்தியாவில் வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்தியாவில் ஆரம்பகால கொரோனா மாறுபாடுகளான டெல்டா, கப்பா அல்லது ஆல்பா வேரியண்ட்கள் அல்லது ஒமிக்ரானின் பல துணை வகைமைகளால் குழந்தைகள் அவ்வளவாக பாதிக்கப்படவில்லை, இளைஞர்கள் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்கின்றனர் நிபுணர்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )