Sam Pitroda:இந்தியர் குறித்து சர்ச்சையான கருத்து: ராஜினாமா செய்த காங்கிரஸ் அயலக தலைவர் சாம் மீண்டும் நியமனம்!
Sam Pitroda: தேர்தலுக்கு முன் சர்ச்சை கருத்தை தெரிவித்த காங்கிரஸ் அயலக பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா ராஜினாமா செய்த நிலையில் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு முன்பு, இந்தியர்கள் குறித்து வெளிநாட்டவர்களுடன் தொடர்பு படுத்தி பேசிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவர் பொறுப்பு வகித்த சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் அயலக பிரிவு தலைவராக நியமனம் செய்து காங்கிரஸ் கட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சர்ச்சையான பேச்சு:
கடந்த மே மாதத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக சாம் பிட்ரோடா பதவி வகித்திருந்தார். இவர், இந்தியாவின் பன்மைத்துவம் குறித்தும், இந்தியர்கள் குறித்தும் பேசியிருந்தார். அப்போது பேசியதாவது, இந்தியாவின் கிழக்கில் உள்ள மக்கள் சீனர்கள் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், தெற்கில் ஆப்பிரிக்கர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தெரிவித்ததில், இந்தியாவில் அங்கும் இங்கும் சில சண்டைகளை தவிர, மக்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழக்கூடிய சூழல்தான் 75 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்தது. இந்திய மக்கள் பல்வேறு மொழிகள், மதங்கள், உணவு, பழக்கவழக்கங்களை மதிக்கிறார்கள், அதுதான் நான் நம்பும் இந்தியா, இங்கு அனைவருக்கும் ஒரு இடம் இருக்கிறது, எல்லோரும் கொஞ்சம் சமரசம் செய்து கொள்கிறார்கள் என்று பிட்ரோடா கூறினார்.
ராஜினாமா:
சாம் பிட்ரோடா இந்தியா நாட்டைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி கடுமையாக குற்றம் சுமத்தியது. இந்தியாவைப் பற்றி சாம் பிட்ரோடா எப்படி புரிந்து கொண்டுள்ளார் என்பது மீண்டும் தெளிவாகிறது. அவருக்கு இந்திய நாட்டைப் பற்றி புரியவில்லை. இந்தியாவையோ அல்லது அதன் பாரம்பரியத்தையோ பற்றி புரியவில்லை என்று, சமூக வலைதளங்களில் பாஜக ஆதர்வாளர்கள் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியர்களை எப்படி வெளிநாட்டவரோடு தொடர்பு படுத்தலாம் என விமர்சனம் தெரிவித்தனர்.
மக்களவைத் தேர்தல் சமயம் என்பதால் காங்கிரஸ் கட்சி மீது பெரும் விமர்சங்கள் எழ ஆரம்பித்தது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவர் பொறுப்பு வகித்த சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார்.
மீண்டும் நியமனம்:
Congress reappoints Sam Pitroda as Chairman of the Indian Overseas Congress. pic.twitter.com/gZt0yPlGM5
— Press Trust of India (@PTI_News) June 26, 2024
இந்நிலையில், தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவராக ( Indian Overseas Congress ) சாம் பிட்ரோடா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.