Flipkart: தேர்தலுக்கு லீவு கொடுக்கல; தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்: விளக்கம் கொடுத்த ஃப்ளிப்கார்ட்
Flipkart Election: தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிளிப்கார்ட் மற்றும் பிக் பாஸ்கட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் பெரிதும் எதிர்பார்த்த நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் நாளை தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலானது, முதல்கட்டமாக நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வாக்கு இயந்திரங்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லும் பணிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது.
தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்தன.
விடுமுறை அளிக்கவில்லை என புகார்:
இந்நிலையில் வணிக நிறுவனமான நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் நிறுவனங்கள் மீது ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நாளில் டெலிவரி செய்யும் நபர்களுக்கு விடுமுறை அளிக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே.நரசிம்மன், தமிழ்நாடு மாநில தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுவை அளித்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு, மக்களாட்சி செயல்பாட்டில் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில், கடைகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
அரசு விடுமுறை அறிவித்த நிலையில், பிளிப்கார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகியவை விடுமுறை அளிக்கவில்லை. தேர்தல் நடைபெறும் நாளிலும் டெலிவரி செய்யப்படும் என பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்தது.
பிளிப்கார்ட் விளக்கம்:
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிளிப்கார்ட் நிறுவனம் தரப்பில் விளக்களிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தெரிவித்துள்ளதாவது,
"பிளிப்கார்ட் நிறுவனமானது, வாக்குப்பதிவு நாள் தொடர்பாக அதிகாரிகள் வழங்கிய அனைத்து உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுகிறோம், மேலும் தகுதியுள்ள அனைத்து ஊழியர்களும் தங்கள் உரிமையைப் பயன்படுத்த ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்குகிறோம். கூடுதலாக, நாங்கள் தேர்தல் குறித்தான விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்துள்ளோம். வாக்களிக்க ஊழியர்களை ஊக்குவிக்கிறோம் என பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்தது.