"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொழில்துறையினருக்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"இந்தியாவில் உற்பத்தி செய்வோம்" திட்டத்தின் பத்து ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் அமர்வில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். 140க்கும் மேற்பட்ட ஊக்கத் தொகைத் திட்டப் பயனாளி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற பிரதமரின் திட்டத்திற்கு ஏற்ப, நீடித்த நடைமுறைகள் மூலம் இந்திய அடையாளத்தை ஊக்குவிக்க உயர்தர பொருட்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பதில் இந்திய தொழில்துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.
"வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த பிஎல்ஐ"
முக்கிய துறைகளில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், உற்பத்தியில் இந்தியாவை உலகத் தலைமை இடமாக நிலைநிறுத்துவதற்கும் சிறந்த கருவியாக செயல்படும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டப் (பிஎல்ஐ-PLI) பயனாளி நிறுவனங்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
அர்ப்பணிப்புடன், புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்து பிஎல்ஐ திட்டம் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பங்களிப்பு செலுத்தியதற்காக நிறுவனங்களுக்கு பியூஷ் கோயல் நன்றி தெரிவித்தார்.
இந்தியாவை தற்சார்புடையதாக மாற்ற தங்கள் தயாரிப்புகளில் உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அதிகரிப்பதில் தலைமை செயல் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு தொழில்துறையினர் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
"இந்தியாவில் உற்பத்தி செய்வோம்"
மூன்று மணி நேர உரையாடலின் போது, பயனாளி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பிஎல்ஐ திட்டம் குறித்த தங்கள் கருத்துகள், அனுபவங்கள், வெற்றிக் கதைகள், செயல்திறனை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, பிரதமரின் 114வது மனதின் குரல் ஒலிபரப்பை அனைத்து பங்கேற்பாளர்களும் கேட்டனர். அதில், "இந்தியாவில் உற்பத்தி செய்வோம்" இயக்கம் இந்தியாவை ஒரு உற்பத்தி சக்தியாக மாற்ற எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளது என்பதையும், அதன் விளைவாக மின்னணுவியல், பாதுகாப்பு, ஜவுளி, விமானப் போக்குவரத்து, மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட பிற துறைகளில் ஏற்றுமதி அதிகரித்துள்ளதையும் பிரதமர் எடுத்துரைத்தார்.