புதுச்சேரிக்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் நிவாரண உதவி - அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
‘நாராயணசாமி அவரது ஆட்சி காலத்தில் என்ன செய்தார் என்று அவருக்கே தெரியும். தற்போது அவர் காழ்ப்புணர்ச்சியாலும், வயிற்றெரிச்சலிலும் பேசுகிறார்
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட வாதானூர், பி.எஸ்.பாளையம், சோம்பட்டு, மண்ணாடிப்பட்டு, திருக்கனூர் ஆகிய கிராமங்களில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இருசக்கர வாகனத்தில் சென்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். அப்போது, அந்த கிராமங்களில் தேங்கி நின்ற மழைநீரை உடனே வெளியேற்றவும், அடைப்பு ஏற்பட்ட வாய்க்காலை தூர்வாரவும், இடிந்த வீடுகள் குறித்து உடனே கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, வாதானூர் இருளர் குடியிருப்பு பகுதிக்கு சென்ற அவர் அங்கு சாய்ந்த நிலையிலும், பொதுமக்களுக்கு இடையூராகவும் இருந்த மரங்களை அகற்ற உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, திருக்கனூர் முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் கொரோன தொற்றால் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் காசோலையும், கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரத்துக்கான பரிசு கூப்பனும், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதானமும், சாலையோர வியாபாரிகளுக்கு தட்டு வண்டிகளையும் அமைச்சர் வழங்கினார். அதன் பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மண்ணாடிப்பட்டு தொகுதியில் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்குவதற்கான ஆயுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. அவை வெகுவிரைவில் வழங்கப்படும்.
புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் அரிசி, சர்க்கரை கிடைப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார். புதுச்சேரிக்கு எப்போது மத்திய குழு வந்தாலும் ஒருசில இடங்களில் தான் ஆய்வு செய்யும். அதன் அடிப்படையில் மத்திய குழு ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளது.அவர்களிடம் நாம் எடுத்து கொடுக்கும் மழை சேத கணக்கெடுப்பின் அடிப்படயில்தான் நிதி ஒதுக்குவார்கள். சாலை, பயிர், கால்நடை உள்ளிட்ட எல்லா வகையான மழை சேதங்களையும் ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்ததுமாறு அனைத்து துறைகளுக்கும் முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அதிகாரிகளும் கணக்கெடுப்பு செய்து வருகிறார்கள். மேலும், புதுச்சேரிக்கு நிவாரண நிதியாக ரூ.300 கோடியும், இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடியும் வழங்குமாறு முதல்வர் ரங்கசாமி கேட்டுள்ளார். மத்திய அரசிடமிருந்து வெகுவிரைவில் நிவாரணம் பெறுவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். என்றார். அப்போது புதுச்சேரியில் நிவாரண பணிகளை அரசு மேற்கொள்ளவில்லை என்று முன்னாள் முதல்வர் நாராணசாமி குற்றம்சாட்டியது குறித்து கேட்டதற்கு, ‘நாராயணசாமி அவரது ஆட்சி காலத்தில் என்ன செய்தார் என்று அவருக்கே தெரியும். தற்போது அவர் காழ்ப்புணர்ச்சியாலும், வயிற்றெரிச்சலிலும் பேசுகிறார். இதனால் அவரது பேச்சுக்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்