Delhi: டெல்லி குண்டு வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் - மத்திய அரசு கண்டனம்!
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த நவம்பர் 10ம் தேதி மிகப்பெரிய அளவிலான அசம்பாவிதம் நடைபெற்றது.

டெல்லியில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் என தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
நாட்டையே அதிர வைத்த சம்பவம்
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த நவம்பர் 10ம் தேதி மிகப்பெரிய அளவிலான அசம்பாவிதம் நடைபெற்றது. அங்குள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள கார் நிறுத்துமிடத்தில் மாலை 6.50 மணியளவில் வெள்ளை நிற ஹோண்டா ஐ20 கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதுதொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காரை ஓட்டி வந்தநர் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் உன் நபி என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு நடந்த நிகழ்ச்சியின் போது டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
#WATCH | Union Cabinet today passed a resolution condemning the November 10 Delhi terror incident and paid its respects to the victims
— ANI (@ANI) November 12, 2025
"The country has witnessed a heinous terrorist incident perpetrated by anti-national forces through a car explosion near Red Fort on 10th… pic.twitter.com/Rs31CldHzH
மத்திய அமைச்சரவை கூட்டம்
இதனிடையே பூடான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று இந்தியா திரும்பினார். அவர் வந்திறங்கியவுடன் நேராக டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் பாதுகாப்பு விவகாரங்களுக்காக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர், அமைச்சர்கள் என அனைவரும் டெல்லி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்த கூட்டத்தில் டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்தித்தார். அப்போது, “டெல்லி சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் ஈடுபட்ட நபர்கள், அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் அடையாளம் காணப்பட்டு எவ்வித தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும்’ என தெரிவித்தார். மேலும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் தேச விரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயல் என அமைச்சரவை கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.





















