3 பேர் பலி! 6 பேர் காயம்! வேகமாக வந்த எஸ்யூவி கார் டோல்கேட்டில் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி விபத்து..
நேற்று இரவு 10.15 மணியளவில் சுங்கச்சாவடிக்கு பாந்த்ராவை நோக்கி வந்து கொண்டிருந்த டொயோட்டா இன்னோவா கார் மெர்சிடிஸ் கார் மீது மோதியது.
மும்பை பாந்த்ரா வோர்லி கடல் இணைப்பு மேம்பாலத்தில் அமைந்துள்ள டோல் பிளாசாவை நோக்கி வேகமாக வந்த எஸ்யூவி கார், அங்கிருந்த வாகனங்கள் மீது மோதியதால் நேற்று இரவு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். 6 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பாந்த்ரா வோர்லி மேம்பாலத்தில் பெரும் விபத்து:
விபத்து எப்படி நடந்தது என்பதை விளக்கிய காவல்துறை தரப்பு, "நேற்று இரவு 10.15 மணியளவில் சுங்கச்சாவடிக்கு பாந்த்ராவை நோக்கி வந்து கொண்டிருந்த டொயோட்டா இன்னோவா கார் மெர்சிடிஸ் மீது மோதியது. சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் முயற்சியில், விபத்தை ஏற்படுத்தியவர், தன்னுடைய காரை சுங்கச்சாவடி வரிசையில் இருந்த வாகனங்கள் மீது மோதினார். இந்த விபத்தில் 2 பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்தனர்" என தெரிவித்தது.
இதுகுறித்து விரிவாக பேசிய மூத்த காவல்துறை அதிகாரி கிருஷ்ணகாந்த் உபாத்யாய், "மோதிய பிறகு, கார் வேகமாகச் சென்று சுங்கச்சாவடியில் வரிசையில் நின்று கொண்டிருந்த இரண்டு, மூன்று வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மொத்தம் 6 வாகனங்கள் சேதம் அடைந்தது.
மொத்தம் ஒன்பது பேர் காயமடைந்தனர், அவர்களில் 3 பேர் இறந்தனர். காயமடைந்த ஆறு பேரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சிறிய காயங்களுக்கு உள்ளான டொயோட்டா இன்னோவா காரை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரையும் பறிமுதல் செய்துள்ளோம்" என்றார்.
5.6 கிலோமீட்டர் நீளமான பாந்த்ரா வோர்லி கடல் இணைப்பு மேம்பாலம், மேற்கு மும்பையில் உள்ள பாந்த்ராவையும் தெற்கு மும்பையில் உள்ள வொர்லியையும் இணைக்கிறது. கடந்த சில மாதங்களாகவே, இந்த மேம்பாலத்தில் விபத்து நடப்பது தொடர் கதையாகி வருகிறது.
அதிகரிக்கும் சாலை விபத்துகள்:
இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,53,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 3,84,448 விபத்துகளில் 1,31,714 பேர் மரணம் அடைந்தனர். 3,48,279 பேர் காயம் அடைந்தனர்.
2021-ம் ஆண்டு தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. 2021-ம் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது.