’பைபிள், குரான் உடன் பகவத் கீதையை ஒப்பிட முடியாது’ - கர்நாடக கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் சர்ச்சை பேச்சு..
’பைபிள், குரான் உடன் பகவத் கீதையை ஒப்பிட முடியாது என கர்நாடக கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் சர்ச்சையாக பேசியுள்ளார்.
திரு குர்-ஆன் மற்றும் பைபிள் உடன் பகவத் கீதை நூலை ஒப்பிட முடியாது என கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் (B C Nagesh) சர்ச்சையாக பேசியுள்ளார்.
சமீபத்தில், கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார் பள்ளி ஒன்று தங்கள் பள்ளி மாணவர்கள் பைபிள் வைத்திருக்க வேண்டும் என்றும் அதைப் படிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. ஒரு கிறிஸ்துவ பள்ளி நிர்வாகத்தின் இந்தச் செயல் கடும் சர்ச்சைக்குள்ளாது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு பிஷ்ப் பீட்டர் மாச்சாடோ Peter Machado, (Archbishop of Bengaluru), “குழந்தைகள் பகவத் கீதை நூலை வாங்க வேண்டும்; படிக்க வேண்டும் என்று கூறுவது, அவர்களை வற்புறுத்துவதில் சேராதா?இதன்மூலம் அவர்களை இன்னோரு மதத்திற்கு மாற வேண்டும் என்று சொல்வது போல ஆகாதா? ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மாற வேண்டும் என்று அவர்களை மூளைச்சலவை செய்வதாக இருக்காதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், கர்நாடக கல்வித்துறை அமைச்சர் தனது கருத்தைக் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், “பைபிளும் குரானும் மத நூல்கள். மதத்தை நம்புபவர்கள் அந்தந்த மத நூல்களை கட்டாயம் படிக்க வேண்டும் என்கின்றன அந்தந்த மதங்கள். ஆனால் பகவத் கீதை மதத்தைப் பற்றி பேசவில்லை. வாழ்க்கையை நல்வழியில் வாழ்வதற்குத் தேவையான மதிப்புகள் பற்றி மட்டுமே பேசுகிறது. குரான், பைபிள் போன்ற பிற மத நூல்களுடன் பகவத் கீதையை ஒப்பிட முடியாது. சுவாமி விவேகானந்தர் வாழ்வைப் போல, இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் கற்பிக்கலாம். ஆனால், மாணவர்கள் மீது மத சார்ந்த உரையையோ, கருத்துக்களையோ திணிக்கக்கூடாது.” என்று கூறினார்.
மேலும், நேற்று ஹிந்து ஜனஜக்ருதி சமிதியின் உறுப்பினர்கள், கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளி மதமாற்றத்தை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி, நாகேஷைச் சந்தித்து, இந்த விஷயத்தில் அவர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகம் பைபிளைப் போதிப்பது குறித் உறுதிமொழியில் பெற்றோர்கள் கையெழுத்திட்ட பின்னரும்கூட, இதுவரை பைபிள் கற்பிக்கப்படுவதற்கு எந்த பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த பொய் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது குறித்த சட்ட ஆலோசனையை பெற்றுவருகிறோம்" என தெரிவித்துள்ளது. பள்ளியில் மாணவர்களைச் சேர்க்கும் முன்பே வழங்கப்படும் படிவத்தில் இது குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும் என்கிறது பள்ளி நிர்வாகம்.
மாநிலத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ பள்ளிகளிலும் பைபிளைப் படிப்பதைக் கட்டாயமாக்குவது தொடர்பாக பாடத்திட்டத்தில் உள்ளதா என்பதை ஆய்வு செய்யுமாறு மாநிலக் கல்வித் துறை, (Block Education Officer (BEO))உத்தரவிட்டுள்ளது.
இது கர்நாடக கல்விச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறிய நாகேஷ், பாடத்திட்டத்தில் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
கிறிஸ்தவ நிர்வாகங்களால் நடத்தப்படும் பள்ளிகளில் பைபிளைப் படிக்க மறுக்கும் குழந்தைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று தகவல் இருப்பதாக நாகேஷ் கூறியிருந்தார். "திப்பு சுல்தான் பாடம் நீக்கம், மற்றும் ஹிஜாப் பிரச்சினை பற்றிய குறித்து பேசும் எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்த விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர் சாடினார்.