AP Bus Fire: எரிந்து கருகிய 20 உயிர்கள்.. காரணமான பேட்டரிகள், ஸ்மார்ட்போன்கள் - கோர விபத்தின் திடுக்கிடும் தகவல்
AP Bus Fire: ஆந்திராவில் 20 பேர் பலியான பேருந்து தீ விபத்துக்கான காரணம் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

AP Bus Fire: பேட்டரிகள் தீ விபத்திற்கு காரணமாக, பேருந்தில் இருந்த ஸ்மார்ட்போன்கள் அதை மோசமாக மாற்றியுள்ளன.
20 பேரை பலி வாங்கிய விபத்து:
ஆந்திர மாநிலம் கர்னூலில் 20 பயணிகளில் உயிரை பறித்த, பேருந்து தீ விபத்தின் தாக்கம் இன்னும் பொதுமக்களிடையே மறையவில்லை. இந்நிலையில் பைக்கின் மீது மோதியதன் விளைவாக பேருந்தில் இருந்த 12KV பேட்டரிகள் வெடித்ததே, தீ விபத்துக்கு காரணம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதோடு, பேருந்தில் இருந்த ஏராளமான ஸ்மார்ட்போன்களும், தீ மளமளவென பரவுவதற்கு வழிவகை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று கட்டுப்பாடின்றி சாலையில் ஓட்டிச் செல்லப்பட்ட பைக்கின் மீது, 40-க்கும் அதிகமானோரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மோதியது. அப்போது பேருந்துக்கு அடியில் சிக்கிக் கொண்டு சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட, பைக்கின் எரிபொருள் டேங்க் வெடித்து தீப்பற்றியுள்ளது. இதன் விளைவாக பரவிய தீயால், பேருந்தில் இருந்த 19 பயணிகள் மட்டும் பைக்கை ஓட்டி வந்த நபர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆபத்தாக மாறிய ஸ்மார்ட்போன்கள்?
தடயவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, ஐதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த அந்த தனியார் பேருந்தில், 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான 234 ஸ்மார்ட் போன்கள் அடங்கிய பெட்டி இருந்துள்ளது. அவற்றிலிருந்த லித்தியம் - அயர்ன் பேட்டரிகள் தீ விபத்தின் காரணமாக வெடித்துச் சிதறி விபத்தை மேலும் தீவிரமாகவும், மோசமானதாகவும் மாற்றியிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. இதன் விளைவாக ஓட்டுனரின் இருக்கையை தாண்டி பயணிகளின் பகுதிக்கும் தீ வேகமாக பரவியிருக்கும் என கருதப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், பேருந்தின் முன்பக்கத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதாகவும், பைக் வாகனத்தின் அடியில் சிக்கியதால் தீப்பிடித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக ஏற்பட்ட தீப்பொறிகள் மற்றும் எரிபொருள் கசிவு தீ விபத்துக்கு வழிவகுத்தன. அலுமினிய தரை வெப்பத்தில் உருகி, விபத்தை மோசமாக்கியதாக தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை சொல்வது என்ன?
இதனிடையே, தீ விபத்துக்குக் காரணம் பேருந்தில் இருந்த இரண்டு 12 கேவி பேட்டரிகள் தான் என்றும், ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் அப்படியே இருந்ததால் அவை காரணமல்ல என்றும் கூறியுள்ளார். அதன்படி,
"தீ விபத்துக்கு பைக்கின் எரிபொருள் டேங்க் முக்கிய காரணம் அல்ல. அது வெடித்தும் பேருந்தின் பிரதான வெளியேறும் கதவில் தீப்பிடித்தது. அதன் பின்பக்கத்தில் தான் பேருந்தின் இரண்டு 12 KV பேட்டரிகள் இருந்தன. அவை வெடித்ததே விபத்து பெரிதாக காரணம். அதோடு, பேருந்தில் உலோக வண்ணப்பூச்சு உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களும் பொருத்தப்பட்டிருந்தன, இது தீயை மேலும் வேகமாக பரவ செய்தது..
ஓட்டுனர், கூடுதல் ஓட்டுனர் கைது
விபத்து ஏற்பட்டதும் சூழலை கட்டுப்படுத்த முயற்சிக்காமல் பிரதான ஓட்டுனர் லக்ஷ்மைய்யா, பேருந்தில் இருந்து எகிறி குதித்து தப்பியுள்ளார். அதன் பிறகு வெளிப்புறத்தில் லக்கேஜ்களை வைக்கும் பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த கூடுதல் ஓட்டுனர் சிவநாராயணனை எழுப்பியுள்ளார். இதையடுத்து இருவரும்சேர்ந்து கையில் கிடைத்த இரும்பு ராடைக் கொண்டு, ஜன்னல் கண்னாடிகளை உடைத்து சில பயணிகளை தப்பிக்கச் செய்துள்ளனர். ஆனாலும், தீ வேகமாக பரவியதால், விபத்து ஏற்படுத்திய அச்சத்தில் லக்ஷ்மையா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இருப்பினும், தற்போது இரண்டு ஓட்டுனர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



















