“என் அப்பாதான் எனக்கு ஹீரோ; அவர் நினைவோடு பயணிப்பேன்” - எல்.எஸ்.லிடரின் 17 வயது மகள் ஆஷ்னா உருக்கம்
என் தந்தையின் மறைவு நாட்டுக்கான இழப்பு என ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர் எல்.எஸ்.லிடரின் மகள் ஆஷ்னா தெரிவித்துள்ளார்
என் தந்தையின் மறைவு நாட்டுக்கான இழப்பு என ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர் எல்.எஸ்.லிடரின் மகள் ஆஷ்னா தெரிவித்துள்ளார்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது. ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் உயிரிழந்தனர்.
அதில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி முதுலிகா ராவத், ராணுவ வீரர்கள் லிட்டெர், ஹர்ஜிந்தர் சிங், குருசேவாக் சிங், ஜிதேந்தர் குமார், விவேக் குமார், சாய் தேஜா, சாத்பால், சவுஹான், குல்தீப், பிரதீப், தாஸ் ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் மட்டும் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் உடல்களும் விமானம் மூலம் குன்னூரில் இருந்து டில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று இரவு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் டில்லி கண்டோன்மெண்ட்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் எல்.எஸ் லிடருக்கு குடும்ப முறைப்படி இறுதி சடங்கு நடைபெற்றது.
தொடர்ந்து எல்.எஸ். லிடரின் உடலுக்கு அவரது மனைவியும், மகள் ஆஷ்னாவும் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லிடரின் மகள் ஆஷ்னா “என் தந்தையின் மறைவு நாட்டுக்கான இழப்பு. அவர் எனது ஹீரோ, எனது நண்பர். எனக்கு 17 வயது ஆகப்போகிறது. அவர் இதுவரை என்னுடன் இருந்த நினைவுகளுடன் பயணிப்பேன். இனி வரும் காலங்களில் நல்லது நடக்கும்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதனால் உண்மை வெளிவரும் வரை யூகம் செய்யாதீர்கள் எனவும் விமானப்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து முப்படைகளின் விசாரணைக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உண்மையை கண்டறியும்வரை யூகம் செய்யாதீர்கள். விரிவான விசாரணை நடத்தி விரைவாக உண்மைகள் வெளியிடப்படும். இறந்தவர்களின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும்வகையில் யூகங்களை தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்