பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளுக்கு நெருக்கடி...விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!
குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் இன்றளவும் மறக்க முடியாத கொடூரமாக உள்ளது.
இந்த கலவரத்தின்போது டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானு தன்னுடைய குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறொரு பகுதிக்கு சென்றுள்ளார்.
பில்கிஸ் பானுவுக்கு அப்போது 21 வயது ஆகியிருந்தது. 5 மாதம் கர்ப்பிணியாகவும் இருந்தார். அவருக்கு 3 வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தையும் இருந்தது.
பில்கிஸ் பானு தன்னுடைய குடும்பத்தின் 17 பேருடன் வேறு கிராமத்திற்கு புறப்பட்டபோது, மார்ச் 3ஆம் தேதி, ஷபர்வாட் என்னும் கிராமத்தில் 20-30 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டனர்.
பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தையை கொடூரமாக சுவற்றில் அடித்துக்கொன்றது அந்த கும்பல். கர்ப்பிணியான பில்கிஸ், அவரது அம்மா உள்பட 3 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் 14 பேரை கொடூரமாக கொலை செய்தனர்.
இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், நன்னடத்தையின் அடிப்படையில் 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு ஆகஸ்ட் 15ஆம் தேதி முன்கூட்டியே விடுவித்தது. குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக, குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து ஹீரோக்கள் போல இந்து அமைப்பினர் வரவேற்றது மக்களிடையே கோபத்தை உண்டாக்கியது. இந்நிலையில், குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
#BREAKING Bilkis Bano approaches Supreme Court challenging the premature release of the 11 persons who were sentenced to life imprisonment for gang-raping her and murdering her family members during the 2002 Gujarat riots.#SupremeCourtOfIndia #BilkisBano pic.twitter.com/NqwSjpbjJF
— Live Law (@LiveLawIndia) November 30, 2022
முன்னதாக, ஆயுள் தண்டனையை எதிர்த்து 11 குற்றவாளிகளில் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும்போது, 1992 தண்டனை குறைப்பு விதியின் கீழ் அவரை விடுவிப்பது குறித்து குஜராத் அரசு பரிசீலிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியது.
அந்த தீர்ப்பின் அடிப்படையில் மாநிலத்திலும் மத்தியிலும் உள்ள பாஜக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து 11 குற்றவாளிகளையும் இரண்டே வாரங்களில் விடுதலை செய்தது.
பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றவாளிகளின் விடுதலையை தடுக்கும் 2014 தண்டனை குறைப்பு விதியை குஜராத் அரசு கடைப்பிடித்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.