கழுத்தை நெரித்த கடன் தொல்லை...! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை..!
பீகாரில் கடன் தொல்லையால் இரண்டு மகன்கள், வயதான தாய் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது சமஸ்திபூர் மாவட்டம். இங்குள்ள வித்யாபதி நகர் அருகே வசித்து வந்தவர் மனோஜ்ஜா. இவரது மனைவி சுந்தர்மணி தேவி. அவருக்கு வயது 38. அவர்களது இரண்டு மகன்கள் சத்யம் குமார் 10 வயது. ஷிவம்குமார் வயது 7. மனோஜ்ஜாவின் தாயார் சீதா தேவி. அவருக்கு வயது 65.
இந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் நேற்று திடீரென வீட்டிற்குள் சடலமாக கிடந்துள்ளனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 5 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களது மரணம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மனோஜ் ஜாவிற்கு பெரியளவில் கடன் இருந்துள்ளது. புகையிலை விற்கும் கடைக்காரர், சுய உதவிக்குழு என்று பல தரப்பில் அவர் கடன் வாங்கியுள்ளார். மனோஜ் ஜாவின் தொழில் அவரிடம் இருந்த இரண்டு நான்கு சக்கர வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிளை நம்பிதான் அவரது தொழில் இருந்தது. இந்த வாகனங்களும் வங்கியில் பெற்ற கடன்தொகை மூலமாகவே அவர் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கியினர் மனோஜ் ஜாவின் வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். தன்னுடைய வாகனங்கள் இல்லாமல் மனோஜ் ஜாவின் தொழில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடன்கொடுத்தவர்கள் அனைவரும் கடனைத் திருப்பித்தர சொல்லி மனோஜ் ஜாவிற்கு நெருக்கடி அளித்துள்ளனர். இதனால், என்ன செய்வதென்று அறியாத மனோஜ் ஜா குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
ரூபாய் 18 லட்சத்திற்கும் அதிகமான அளவு கடன் தொல்லைக்கு ஆளாகிய மனோஜ் ஜா இரண்டு குழந்தைகள் உள்பட தனது ஒட்டுமொத்த குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ளார். கடந்தாண்டு மனோஜ்ஜாவின் தந்தை ரவிகாந்த்ஜாவும் மகள் திருமணத்திற்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழலுக்கு ஆளாகியதால் தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்